2016-05-07 14:59:00

சுவிஸ் மெய்க்காப்பாளர்களுக்கு திருத்தந்தை நன்றி


மே,07,2016. சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்கள், திருப்பீடத்திற்கு விசுவாசமாக இருந்து, ஆற்றிவரும் பணிகளுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளியன்று புதிதாகப் பணியில் சேர்ந்த 23 சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சில ஆண்டுகள் திருஅவைக்கென தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் இளையோரைப் பார்ப்பதற்கு மகிழ்வாக உள்ளது என்று கூறினார்.

விசுவாசத்தில் வளர்தல், திருஅவையின் உலகளாவியப் பண்பில் அனுபவம் பெறுதல், உடன்பிறப்பு உணர்வில் அனுபவம் அடைதல் ஆகிய மூன்று கருத்துக்களின் அடிப்படையில் உரையாற்றிய திருத்தந்தை, இயேசு ஒப்படைத்த பணியை ஆற்றுவதற்காக, இந்த மெய்க்காப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் 

1527ம் ஆண்டில் உரோம் சூறையாடப்படபோது, திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்ட சுவிஸ் வீரர்களில் 147 பேர், மே 6ம் நாள் கொல்லப்பட்டனர். அதன் நினைவாக, வத்திக்கானில், மே 6ம் தேதி சுவிஸ் கார்ட்ஸ் விழா சிறப்பிக்கப்படுகிறது. திருத்தந்தை 7ம் கிளமென்ட் அவர்களைப் பாதுகாப்பாக Castel Sant’Angelo என்ற இடத்திற்குக் கொண்டு சேர்த்தனர் சுவிஸ் வீரர்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.