2016-05-07 14:41:00

இது இரக்கத்தின் காலம்: 'பெண்களுக்கு மரியாதை' – திருத்தந்தை


பெண்களையும், அன்னையரையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள மே மாத செப கருத்து, 'பெண்களுக்கு மரியாதை' என்ற தலைப்பில், ஒரு காணொளித் தொகுப்பாக வெளியாகியுள்ளது. இக்காணொளித் தொகுப்பின் துவக்கத்தில், அறிவியல் ஆய்வாளராக, மருத்துவராக, இல்லத்தில் தன் குழந்தைக்கு உதவும் அன்னையாக, அருள் சகோதரியாக பணியாற்றும் பெண்கள் திரையில் தோன்றுகின்றனர். அவ்வேளையில், திருத்தந்தையின் குரல், பின்னணியில் ஒலிக்கிறது:

"குடும்பத்தில் துவங்கி, அனைத்துத் துறைகளிலும், பெண்களின் பங்களிப்பு மறுக்கமுடியாத உண்மை. இதை நாம் உணர்ந்தால் மட்டும் போதுமா?" என்ற கேள்வியுடன், திருத்தந்தையின் சிந்தனைகள் துவங்குகின்றன.

இதைத் தொடர்ந்து, இக்காணொளித் தொகுப்பில், ஒரு குடும்பத்தலைவி, சமையலறையில் வேலை செய்வது, தரையைக் கழுவி சுத்தம் செய்யும் பெண், தொழிற்சாலையில் பணியாற்றும் பெண், பூங்காவில் அமர்ந்திருக்கும் ஆணும், பெண்ணும், வகுப்பறையில் கற்றுத் தரும் ஆசிரியர் என்ற பல காட்சிகளுடன், திரையில் பல சொற்றொடர்களும் தோன்றி மறைகின்றன. "ஆணைப்போலவே நானும் வேலைக்குச் செல்கிறேன்"; "நான் ஒரு போதும் அடிமையாகமாட்டேன்"; "பாலின வன்முறை வேண்டாம்"; "பணியிடங்களில் நிலவும் பாகுபாடுகள் போதும்"; "ஆணும், பெண்ணும் ஆண்டவனின் குழந்தைகள்" ஆகிய சொற்றொடர்கள் திரையில் தோன்றி மறைகின்றன. இக்காட்சிகளின்போது, திருத்தந்தையின் குரல் பின்னணியில் இவ்வாறு ஒலிக்கிறது:

"மிகக் கடினமானச் சூழல்களில், அடிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நாம் எதுவும் செய்யவில்லை. பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டனம் செய்யவேண்டும். சமுதாயத்தில் தடையாக உள்ள அனைத்தையும் நீக்கி, அரசியல், பொருளாதாரம், என்ற அனைத்து நிலைகளிலும், பெண்களை, முழுமையாக இணைக்க வேண்டும்.

இக்கருத்து சரியென்று நீங்கள் உணர்ந்தால், என் மன்றாட்டுடன் நீங்களும் இணையுங்கள். உலகின் அனைத்து நாடுகளிலும், பெண்கள் மனித சமுதாயத்திற்கு வழங்கும் பங்களிப்பிற்காக, அவர்கள் மதிக்கப்பெற்று, போற்றப்பட வேண்டும் என்பதே, என் மன்றாட்டு" என்று திருத்தந்தை தன் மே மாத செபக் கருத்தை விளக்கிக் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.