2016-05-07 15:32:00

240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் வாழ்ந்த உயிரினம்


மே,07,2016. முதலையைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட கடல்வாழ் உயிரினம் ஒன்று, ஏறத்தாழ 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தாவரங்களை மட்டுமே உண்டு வாழ்ந்த மிகப் பழமையான கடல்வாழ் உயிரினம் இது என்று, புதிதாகக் கிடைத்துள்ள புதைபடிவத்திலிருந்து தெரிய வந்துள்ளதாக, ஸ்காட்லாந்திலுள்ள அறிவியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.

சீனாவில் கிடைத்த புதைப்படிமங்களை ஆராய்ந்த அறிவியலாளர்கள், புதுமையான வகையில், சுத்தியல் போன்ற தலைவடிவம் கொண்ட அந்த உயிரினங்கள், கடல் நீருக்கு அடியில் இருந்த தாவரங்களையே உணவாகக் உட்கொண்டன எனக் கண்டறிந்துள்ளனர்.

அடோபொடெண்டாடஸ் என அழைக்கப்படும் அந்த உயிரினம், அகண்ட தாடைகளையும், பட்டையான கூர்வடிவப் பற்களையும் கொண்டிருந்தன என்பது இந்தப் புதைபடிமங்களில் தெரிகிறது.

அத்தகைய பற்களைக் கொண்டு, கடலுக்கு அடியில் இருந்த பாறைகளைச் சுற்றி வளர்ந்திருந்த தாவரங்களைச் சுரண்டி அவை உணவாக உட்கொண்டன.

இந்த உயிரனத்துடன் சமகாலத்தில் வாழ்ந்த, ஊர்வன உயிரினங்கள், மீன் மற்றும் பிற உயிரனங்களை அல்லது தங்களின் இனத்தையே அடித்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தன எனவும் அந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.