2016-05-05 15:16:00

உடலாலும், உள்ளத்தாலும் துன்புறுவோருக்கு இரக்கத்தின் யூபிலி


மே,05,2016. "இறைவன் நமக்கு ஆறுதல் அளிக்கிறார். நம் துயரங்களின் காரணங்களை இறைவனால் மட்டுமே நீக்க முடியும் என்பதற்கு சாட்சியம் பகர்ந்து, நம் சகோதர, சகோதரிகளைத் தேற்றுவதற்கு, நாம் அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக மே 5, இவ்வியாழனன்று வெளியிட்டார்.

மேலும், உடலாலும், உள்ளத்தாலும் துன்புறுவோருக்கு இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் பலன்கள் சென்றடையவேண்டும் என்ற எண்ணத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் "கண்ணீரைத் துடையுங்கள்" என்ற திருவிழிப்பு வழிபாட்டை அறிவித்துள்ளார் என்று உரோம் நகரில் இயங்கிவரும் UNITALSI என்ற பிறரன்புப் பணி அமைப்பின் தலைவர், Emanuele Trancalini அவர்கள் கூறினார்.

இவ்வியாழன் மாலை 6 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும் வழிபாட்டிற்கு மாற்றுத் திறனாளிகள் பலரை அழைத்து வரும் UNITALSI அமைப்பின் தலைவர் இவ்வாறு கூறினார்.

புனிதக் கதவை நாடிவர இயலாமல், நோயாலும், தனிமையாலும் துயருறும் பலரை மனதில் கொண்டு, திருத்தந்தை இந்த வழிபாட்டை ஏற்பாடு செய்துள்ளார் என்று UNITALSI அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவர் கூறினார்.

இத்தாலியின் சிசிலித் தீவில் அமைந்துள்ள Syracuse நகரில் 1953ம் ஆண்டு நிகழ்ந்த ஓர் அற்புத நிகழ்வில், தொழிலாளரான Angelo Iannuso என்பவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் உருவப்படம் கண்ணீர் விடத் துவங்கியது.

இந்த அற்புத நிகழ்வின் நினைவாக, இந்த அன்னையின் திரு உருவம், இவ்வியாழன் நடைபெறும் வழிபாட்டில் மக்கள் வணக்கத்திற்கென வைக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.