2016-05-04 15:38:00

மே 6, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு Charlemagne விருது


மே,04,2016. மே 6, இவ்வெள்ளியன்று, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் உயர்ந்த விருதான, அகில உலக Charlemagne விருது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகளின் ஒருங்கிணைப்பிற்காக பாடுபடுவோருக்கு வழங்கப்படும் இவ்விருதுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி, கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வெள்ளி மதியம் 12 மணிக்கு வத்திக்கானில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தலைவர், Martin Schulz, விருதுக் குழுவின் தலைவர், Jean-Claude Juncker ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

2014ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வழங்கிய உரையில், பழம் பெரும் கலாச்சாரங்களின் விளைநிலமான ஐரோப்பிய கண்டம், அமைதியிலும், சமுதாய வளர்ச்சியிலும் அக்கறை காட்டவேண்டும் என்று விடுத்த அழைப்பு, இவ்விருதினை அவர் பெறுவதற்கு ஒரு காரணமாக அமைந்ததென விருது வழங்கும் குழு அறிவித்துள்ளது.

இரக்கம், சகிப்புத்தன்மை, ஒருங்கிணைப்பு, படைப்பு அனைத்துடன் வாழும் வழிகள் ஆகியவற்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பணியில் இணைத்துள்ளதற்காக, இவ்விருதுக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று விருது வழங்கும் குழுவினர் கூறியுள்ளனர்.

ஐரோப்பாவின் தந்தை என்றழைக்கப்படும் மன்னர் Charlemagne அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இவ்விருது, கடந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தலைவர், Martin Schulz அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.