2016-05-04 15:55:00

புலம் பெயர்ந்தோர் பங்கேற்ற ஒலிம்பிக் தீபத் தொடர் ஓட்டம்


மே,04,2016. பிரேசில் நாட்டை அடைந்துள்ள ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டத்தை, அந்நாட்டில் வாழும் சிரியா நாட்டு புலம் பெயர்ந்தோரில் ஒருவரான Hanan Dacka என்ற 12 வயது சிறுமி, இச்செவ்வாயன்று துவக்கி வைத்தார்.

பிரேசில் நாட்டின் São Paulo நகரில் கடந்த ஓராண்டளவாய் வாழ்ந்துவரும் சிறுமி Hanan அவர்கள், அந்நாட்டில் அடுத்த 90 நாட்கள் நடைபெறவுள்ள தொடர் ஓட்டத்தைத் துவக்கி வைக்க ரியோ ஒலிம்பிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

புலம் பெயர்ந்தோரும் மற்றவர்களைப் போல உண்மையான மனிதர்கள்தாம் என்பதையும், அவர்களால் மனித சமுதாயத்திற்கு நன்மைகள் செய்ய முடியும் என்பதையும் உணர்த்துவதற்கு தான் இந்தத் தீபத்தை ஏந்தி ஓடுவதாக, சிறுமி Hanan அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 21ம் தேதி, கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம், ஏதென்ஸ் நகருக்கு அருகே அமைந்துள்ள Eleonas புலம் பெயர்ந்தோர் முகாம் வழியே கொண்டு செல்லப்பட்டபோது, புலம் பெயர்ந்தவரான Ibrahim al-Hussein அவர்கள், தீபத்தை ஏந்தி ஓடினார் என்று UN செய்திக் குறிப்பு கூறியுள்ளது.

90 நாட்கள், பிரேசில் நாட்டின் பல நகர்கள் வழியே எடுத்துச் செல்லப்படும் ஒலிம்பிக் தீபம், ரியோ மாநகரின் Maracana விளையாட்டுத் திடலில் ஆகஸ்ட் 5ம் தேதி, நடைபெறும் துவக்க விழாவின்போது, அங்கு சென்றடையும்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.