2016-05-04 16:08:00

திருத்தந்தையின் மறைக்கல்வி: ‘தொலைந்த ஆட்டை தேடும் நல்லாயன்’


மே,04,2016. உரோம் நகரில் கோடை காலம் துவங்கி விட்டாலும், இதமான குளிர் காற்றும் வீசிக்கொண்டிருப்பதால், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.  இவ்வாண்டு திருஅவையில் 'இரக்கத்தின் யூபிலி ஆண்டு' சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கொள்ளும் விசுவாசிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இறை இரக்கம் குறித்த சிறப்பு கருத்துக்களை விசுவாசிகளுடன் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று இயேசுவின் நல்லாயன் உவமை குறித்து எடுத்துரைத்தார்.

இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிற்கென தொடர்ந்துவரும்  நம் மறைக்கல்வி போதனையில் இன்று, இயேசுவின் நல்லாயன் உவமை குறித்து நோக்குவோம். தன் மந்தையிலுள்ள அனைத்து  ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமல் போன ஓர் ஆட்டைத்தேடி ஆயன் அலையும் உவமையில், பாவிகளுக்கு மிக அருகாமையில் இறைவன் இருக்கிறார் என்பதை காண்பிக்கவே நல்லாயன் என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறார் இயேசு. ஒருவரைக்கூட இழக்க இறைவன் விரும்பவில்லை. முடிவற்ற இரக்கத்தைக் கொண்டுள்ள இறைவன், நாம் எங்கிருந்தாலும் நம்மைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறார். இறைவனின் இந்த நல்லாயன் எடுத்துக்காட்டானது, இறை இரக்கத்தின் உதவி தேவைப்படுபவர்களை, குறிப்பாக, பாதை மாறிச் சென்றுள்ள மக்களை நாம் தேடிச்செல்ல வேண்டிய அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. இயேசுவின் பார்வையில் 'தொலைந்த ஆடு' என்று எதுவும் இல்லை, மாறாக, தேடி, கண்டுகொள்ள வேண்டிய ஆடே உள்ளது என்பதை இயேசுவே நமக்கு கற்பிக்கிறார். ஆட்டைக் கண்டுகொண்டபின், நல்லாயன் அடையும் மகிழ்வானது, ஆட்டு மந்தை அனைத்துமே கொள்ளவேண்டிய மகிழ்வாகும். நாமனைவருமே, தொலைந்து போய், பின்னர், இறை இரக்கத்தால் கிடைத்துள்ள ஆடுகளே. இறைவனின் இந்த இரக்கம் நிறை அன்பு குறித்து மகிழ்ச்சிகொள்ள நாம் அனைவருமே அழைக்கப்பட்டுள்ளோம். இந்த அன்பை நாம் மற்றவர்களுக்கு கொணரவும், தொலைந்து போனவர்களை, தன் மீட்பின் வழியாக மந்தையில் இணைக்க விரும்பும் இறைவனின் திட்டத்தில் அவரோடு இணையவும்,  நாம் அழைப்புப் பெற்றுள்ளோம். இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை நிறைவுச் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

புதன் மறைக்கல்வி உரையை வழங்க வருவதற்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்சமய உரையாடல் திருப்பீட அவையினால் ஏற்படு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட, ஜோர்டன் நாட்டின் அம்மானிலுள்ள பல்சமயக் கல்விக்கழகத்தின் அங்கத்தினர்களுக்கு ஒரு சிறு உரையும் வழங்கினார். ஜோர்டன் நாட்டில் தான் மேற்கொண்ட திருப்பயண நிகழ்வுகளை இன்றும் நினைவுகூர்கிறேன் என உரைத்தத் திருத்தந்தை, அழிவைத் தரும் போர்களுக்குப் பழக்கமாகி வரும் இன்றைய உலகில், பேச்சுவார்த்தைகளே சமூகத்தைக் கட்டியெழுப்பும் வல்லமையுடையது என்றார். இருதரப்பினரின் வார்த்தைகளும் நினைவுகளும் ஒரே இடத்தில் சந்திப்பதே, பயணத்தின் துவக்கம். வார்த்தைகள் சந்தித்தபின், இதயங்களின் சந்திப்பு இடம்பெற்று, நட்புணர்வின் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன, அது நிறைவுறுவதோ கைகளின் அரவணைப்புடன். வார்த்தைகள், இதயம், பின், கைகள் என்பது எளிமையானது. ஒரு குழந்தையால்கூட செய்ய முடியும். நம்மால் ஏன் செய்ய முடியாது? நம்மனைவருக்கும் பொதுவான ஒரு தந்தை உள்ளார், நாமனைவரும் சகோதரர்கள்.  நாம் சென்றுகொண்டிருக்கும் இதே பாதையில் தொடர்வது சிறந்தது, என ஜோர்டன் நாட்டின் பல்சமயக் கல்விக்கழகத்தின் அங்கத்தினர்களுக்கு தன் உரையை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.