2016-05-04 15:48:00

ஜோர்டான் நாட்டு பலசமயக் குழுவினரைப் பாராட்டிய திருத்தந்தை


மே,04,2016. போரினால் உருவாகும் அழிவுகளுக்குப் பழகிப்போன சமுதாயத்தில், உரையாடல் வழியே சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் ஜோர்டான் நாட்டு பலசமயக் குழுவினரைப் பாராட்டுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஜோர்டான் தலைநகர் அம்மானில் இயங்கிவரும் "Royal Institute for Interfaith Studies" என்ற அமைப்பின் உறுப்பினர்களை, இப்புதன் காலை வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

திருப்பீட பல்சமய உரையாடல் அவை ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்க வந்திருக்கும் ஜோர்டான் நாட்டு பிரதிநிதிகளைச்  சந்தித்தத் திருத்தந்தை, அந்நாட்டில் தான் மேற்கொண்ட பயணத்தின் நினைவுகள், இன்னும் தன் உள்ளத்தில் பசுமையாக உள்ளன என்று கூறினார்.

உரையாடல் என்ற முயற்சியில், கேட்பது, பேசுவது என்ற இரு அம்சங்கள் உள்ளன என்றும், வாய் மொழியால் பேசியபின், உள்ளங்கள் பேசும்  வாய்ப்பையும் உரையாடல் உருவாக்குகின்றது என்றும், திருத்தந்தை, இச்சந்திப்பில் எடுத்துரைத்தார்.

வார்த்தை, இதயம், கரம் ஆகியவற்றைக் கொண்டு குழந்தைகள் இணைந்து வர முடிந்தால், வயது வந்த பெரியவர்களாலும் இது சாத்தியம் என்று ஜோர்டான் நாட்டு பலசமயக் குழுவினரிடம் கூறினார், திருத்தந்தை.

மேலும், "கிறிஸ்துவே நமது மிகப் பெரிய மகிழ்வு; அவர் நம்மை ஒரு போதும் கைவிடாமல், என்றும் நம் அருகே இருக்கிறார்" என்ற வார்த்தைகள், இப்புதனன்று வெளியான திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.