2016-05-04 15:30:00

இது இரக்கத்தின் காலம்... – ஒலியற்ற ஓசை


அந்த புத்த மடாலயத்தில் மிகப்பெரிய புத்தர் சிலை ஒன்று இருந்தது. ஒரு வயோதிகத் துறவி அந்த மடாலயத்திற்கு உள்ளே வந்தார். அமைதியாக அங்கே அமர்ந்தார். புத்தரின் அருள் முகத்தை ஏறிட்டு நோக்கினார். அப்படியே நெடுநேரமாய்த் தியானத்தில் இலயித்து விட்டார். பிறகு எழுந்து, மிகவும் அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இதுபோல் தினந்தோறும் நிகழ்ந்தது. மடாலயத்தின் தலைவர் இதனை வியப்புடன் கவனித்து வந்தார். ஒருநாள் வழக்கம்போல், அந்த முதியவர் வந்தார், தியானத்தில் ஆழ்ந்தார். வெளியேறப் போனபோது, மடத்தின் தலைமைக் குரு அவரை அணுகி, பணிவுடன், "ஐயா! நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சொன்னார்?" என்று கேட்டார்.

"அவர் எப்போதும் எதுவும் சொல்லமாட்டார். ஆனால், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்" என்றார் முதியவர்.

"அப்படியா? அதுசரி. அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்?" தனது அடுத்த கேள்வியைக் கேட்டார், மடாலயத்தின் தலைவர்.

"நானும் எதுவும் சொல்ல மாட்டேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்!" என்ற முதியவரின் இந்தப் பதிலிலிருந்து அவர் ஒரு ஜென் குரு என்பதைப் புரிந்து கொண்டார் மடாலயத்தின் தலைவர்.

தியானம் என்பது எதையும் யாசிப்பதல்ல. தன்னுள் மூழ்கித் தன்னைத்தானே அறிதலே! மவுனம் என்பது பேச்சை நிறுத்துவதல்ல. அது ஒரு நிசப்த சங்கீதம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.