2016-05-03 16:17:00

வெனிசுவேலா அரசுத்தலைவருக்கு திருத்தந்தை கடிதம்


மே,03,2016. தென் அமெரிக்க நாடான வெனிசுவேலா, வரலாற்றில் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும்வேளை, அந்நாட்டு அரசுத்தலைவர் Nicolas Maduro அவர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள கடிதம் பற்றிய செய்தியை இத்திங்களன்று உறுதி செய்துள்ள, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், அக்கடிதம் பற்றிய மற்ற விபரங்களை அறிவிக்கவில்லை.  

கடந்த மார்ச் 27ம் தேதி, திருத்தந்தை வழங்கிய ஊர்பி எத் ஓர்பி செய்தியில், வெனிசுவேலா நாட்டின் நிலைமை பற்றிக் குறிப்பிட்டு, அந்நாட்டின் வருங்காலத்திற்குப் பொறுப்பானவர்கள், அனைவரின் ஒத்துழைப்புடன், உரையாடலுக்குப் போதுமான இடம் ஒதுக்கி, பொது நலனுக்காக உழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

மேலும், வெனிசுவேலாவில், முன்னெப்போதும் இல்லாத அளவு, தற்போது உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், இலஞ்சம், ஊழல், கொலைகள் போன்ற ஆபத்துக்களும் பெருகியுள்ளன என்று, ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் அருள்பணி லொம்பார்தி.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய உதவும் நோக்கத்தில், வெளிநாட்டிலிருந்து பொருள்களைக் கொணர, பல்சமய அமைப்புக்களுக்கு அரசு அனுமதி வழங்கவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.