2016-05-03 15:53:00

மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கோள்கள்


மே,03,2016. பூமிக்கு நாற்பது ஒளி ஆண்டுகள் தொலைவில், ஒரு சிறிய விண்மீனை மூன்று கோள்கள் சுற்றி வருவதாகவும், இவை, மனிதர்கள் வாழத் தகுந்த கோள்களாக உள்ளன எனவும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியைப் போல மனிதர்கள் வாழக்கூடிய மூன்று புதிய கோள்கள், முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, Nature என்ற இதழில் இத்திங்களன்று வெளியான ஆய்வுக் கட்டுரையிலிருந்து தெரிய வந்துள்ளது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கோள்கள், பூமியிலிருந்து நாற்பது ஒளி ஆண்டுகள் அல்லது ஏறத்தாழ 240 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளன. இவை அளவிலும் வெப்ப நிலையிலும், பூமி மற்றும் வெள்ளி போன்று உள்ளன. பலகட்ட ஆய்வுக்குப் பின் இந்த மூன்று கோள்களும் மனிதர்கள் வாழத் தகுந்த கோள்கள் என அறிவியலாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

பெல்ஜியத்தின் Liège பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இது பற்றிக் கூறிய அப்பல்கலைக்கழகத்தின் விண்வெளித் துறை அறிவியலாளர் Michaël Gillon அவர்கள், உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரு சிறு சூரியக் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், நம் சூரியக் குடும்பத்தை போலவே இதிலும் வேதியப் படிமங்கள் நிறைந்துள்ளன என்றும் கூறினார்.

ஓர் ஒளி ஆண்டு என்பது, ஓராண்டில் ஒளி பயணிக்கும் தொலைவு ஆகும். ஒளியானது, ஓராண்டில் ஆறு  இலட்சம் கோடி கி.மீ. பயணம் செய்யும்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.