2016-05-02 16:05:00

மத வெறிபிடித்தவர்களை புறந்தள்ளவேண்டும், ஆயர் பொன்னையா


மே,02,2016. மத வெறியைத் தூண்டி அதில் குளிர் காய முனையும் அரசியல்வாதிகளையும் மதத் தலைவர்களையும் இனங்கண்டு அவர்களைப் புறந்தள்ளவேண்டுமென மட்டக்களப்பு-அம்பாறை மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற, அமைதிக்கான இலங்கை மதங்களின் பேரவையின் ஆண்டு ஒன்றுகூடல் பெருவிழாவில் உரையாற்றிய ஆயர் ஜோசப் பொன்னையா அவர்கள்,  மதத்தின் பெயரால் கொடூரங்களும், வன்முறை நிகழ்வுகளும், உலகின் பல பாகங்களிலும் அரங்கேறி வருவதையும், மத நல்லிணக்கமும் சகிப்புத்தன்மையும் கற்பூரம்போல் கரைந்து வருவதையும் பார்க்கும்போது வேதனையளிக்கின்றது என்றார்.

சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வழிபாட்டு முறைகளையும் நுணுக்கமாக கடைப்பிடிப்பதை கடந்து, மனிதரை இறைவனோடு உறவுகொள்ளச் செய்து அவர்களின் இதயங்களில் இருக்கும் தீமைகளைக் களைந்து, இறைத்தன்மையினை அவர்களில் நிலைபெறச் செய்யும் ஓர் அருள்கருவியாக மதங்கள் விளங்கவேண்டும் என அழைப்பு விடுத்த ஆயர் ஜோசப் பொன்னையா அவர்கள், மத வேறுபாடுகளை ஊதிப் பெரிதுபடுத்தி, மதத்தின் பெயரால் பிளவுகளை ஏற்படுத்தும் பாசிச போக்கு ஒழியவேண்டும், மற்றும், மத நல்லிணக்கத்தையும் மத ஒற்றுமையையும் வளர்க்க வேண்டுமானால், பிற மதங்களின் கோட்பாடுகளை அறிதல் அவசியமாகும் எனவும் எடுத்துரைத்தார்.

அமைதிக்கான இலங்கை மதங்களின் பேரவையின் தலைவர் சுவாமி ஸ்ரீமத் பிரவு பிரபாணந்த ஜி மகராஜ் தலைமையில் இந்த ஒன்றுகூடல், பல்மத பிரதிநிதிகளுடன், மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சாரதா தேவி ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஆதாரம் : தமிழ்வின் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.