2016-05-02 13:45:00

இது இரக்கத்தின் காலம் : எதிர்காலத்தின் அடிமைகளாகாமல்...


ஒரு மனிதர், ஓர் ஆட்டுக்குட்டியின் கழுத்திலே கயிற்றைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்றார். அந்த ஆடும், அமைதியாக அவர் பின்னால் சென்று கொண்டிருந்தது. வழியில் அந்த மனிதரைச் சந்தித்த பெரியவர் ஒருவர், அவரிடம், ஏப்பா.., எங்கே போய்க்கிட்டு இருக்கே? என்று கேட்டார். அதற்கு அவர், சந்தைக்குப் போறேன் என்றார். எதுக்குப்பா சந்தைக்கு? என்று பெரியவர் கேட்க, சந்தைக்கு எதுக்கு ஆட்டைக் கொண்டு போவாங்க, விற்கறத்துக்குத்தான் என்றார் அந்த மனிதர். ஏன் இந்த ஆட்டை இப்போ விற்கணும்? என்று பெரியவர் கேட்க, நாளைக்கு எங்க வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்குது, அதுக்கு செலவுக்குப் பணம் வேணும், அதான், இன்றைக்கு இந்த ஆட்டை வித்திட்டா, நாளைக்கு நல்லபடியா வீட்ல நடக்கிற விசேடத்தை நல்லாக் கொண்டாடலாம்ல என்று பதில் சொன்னார் அந்த மனிதர். இப்படிச் சொல்லிவிட்டு, பெரியவரின் அடுத்த கேள்விக்குத் தப்பித்து, வேகமாக ஆட்டை இழுத்துக்கொண்டு சென்றார் அவர். பின்னர் அந்தப் பெரியவர் சொன்னார் : “இந்த ஆட்டை இவர் எப்படி இழுத்துக்கொண்டு போகிறாரோ, அதேமாதிரிதான் அவரை எதிர்காலம் இழுத்துக்கொண்டு போகிறது. நாளைக்குப் பலன் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காகவே இன்று அவர் பாடுபடுகிறார்” என்று. ஆம். மனிதரின் செயல்பாடுகள், நிகழ்காலத்தில் உள்ளன. ஆனால் பலன் எதிர்காலத்தில் இருக்கின்றது. ஆனால் எதிர்காலம் என்பது ஒரு நம்பிக்கை, ஒரு கனவு, ஓர் எதிர்பார்ப்பு. அவ்வளவுதான் என்றார் தென்கச்சி கோ.சுவாமி நாதன். நாம் எதிர்காலத்தின் அடிமைகள் ஆகிவிடாதிருப்போம். இது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.