2016-04-30 14:07:00

மத்திய கிழக்கில் போர்கள் முடிவதற்கு தலைவர்களுக்கு அழைப்பு


ஏப்.30,2016. மத்திய கிழக்கில் இடம்பெறும் போர்கள் முடிவடைவதற்கு, உரையாடல் வழியாக முயற்சிக்குமாறு ஐரோப்பிய பாராளுமன்றத்தினர் மற்றும் பன்னாட்டு சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்தார் லெபனான் கர்தினால் Bechara Rai.

Brusselsல், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய, லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க கர்தினால் Rai அவர்கள், மத்திய கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள், தங்களின் தாயகங்களுக்குத் திரும்புவதற்கு உதவுமாறும் கேட்டுகொண்டார்.

மத்திய கிழக்குப் பகுதியில் காணப்படும் நெருக்கடிநிலை, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதியின் அனைத்து மக்களுக்கும், ஐரோப்பாவுக்குமே பிரச்சனையாக உள்ளது என்றும் கூறினார் கர்தினால் Rai.

அப்பகுதியில், 1,400 ஆண்டுகளுக்கு மேலாக, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து அப்பகுதியைக் கட்டி எழுப்பினார்கள் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத நிறுவனங்களின் வளர்ச்சி, இந்த நிலையை அகற்றக்கூடும் என்றும் கூறினார் கர்தினால் Rai.

ஐந்து இலட்சம் பாலஸ்தீனிய அகதிகள் உட்பட இருபது இலட்சம் பேர், 1948ம் ஆண்டு முதல், ஒரு தீர்வுக்காகக் காத்திருக்கின்றனர் என்றும், 15 இலட்சம் சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரையிலான குழந்தை பிறப்புகள் மூலம் அதிகரிக்கின்றன என்றும் கூறினார் கர்தினால் Rai.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.