2016-04-30 14:32:00

எல் நிஞ்ஞோவுக்கு அடுத்து 'லா நிஞ்ஞா'


ஏப்.30,2016. எல் நிஞ்ஞோ(El Niño) காலநிலை, இப்புவியின் வெப்பத்தை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதியில் லா நிஞ்ஞா (La Niña) எனும் குளிர்நிலை தொடங்கும் எனவும், இது எல் நிஞ்ஞோவைக் காட்டிலும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தொடங்கிய 'எல் நிஞ்ஞோ' காரணமாக, இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை நிலவுகிறது. பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுகிறது. வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது. இந்நிலையில் 'எல் நிஞ்ஞோ' தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா நிஞ்ஞா' காரணமாக, கன மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தக் குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய ஐ.நா. உதவிப் பொதுச் செயலர் ஸ்டீபன் ஓபிரெய்ன் அவர்கள், எல் நிஞ்ஞோவைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் 'லா நிஞ்ஞா' மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது 'எல் நிஞ்ஞோ'வால் ஏற்பட்ட பாதிப்புக்களைவிட மிகக் கடுமையாக இருக்கும். இதனால் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.