2016-04-29 15:13:00

வன்முறைகளை நிறுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பங்கு


ஏப்.29,2016. இன்றைய உலகில், கிறிஸ்தவர்க்கும், பிற மதத்தவர்க்கும் எதிராக நடத்தப்பட்டுவரும் அட்டூழியங்கள் நிறுத்தப்படுவதற்கு, ஏதாவது ஆற்றுங்கள் என்று  நாம் மற்றவரை விண்ணப்பித்தால் மட்டும் போதாதது, நம் ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூயார்க் நகரில், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் அலுவலகத்தில் இவ்வியாழனன்று நடைபெற்ற, சமய சுதந்திரம் மற்றும் பிற மனித உரிமைகளைக் காப்பது குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

மேலும், இக்கருத்தரங்கில் உரையாற்றிய, Knights of Columbus என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் தலைவர் Carl Anderson அவர்கள், கிறிஸ்தவர்க்கும், பிற மதத்தவர்க்கும் எதிராக இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகளை ஒழிப்பதற்கு, உலக சமுதாயம் உடனடியாக உழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் நெருக்கடிநிலை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இடம்பெறும், மாபெரும் மனிதாபிமான நெருக்கடி என்று குறிப்பிட்ட Anderson அவர்கள், சிறுபான்மை மதத்தவர் எதிர்நோக்கும் துன்பங்கள், என்றும் இல்லாத அளவுக்கு, தற்போது உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளன என்றும் கூறினார்.

நைஜீரிய ஆயர் ஜோசப் பாகோபிரி, ஐ.எஸ். இஸ்லாமிய அரசால் கடத்தப்பட்டு விடுதலையடைந்துள்ள கல்தேய கத்தோலிக்க அருள்பணியாளர் டக்ளஸ் அல் பாசி, சிரியாவில் ஐ.எஸ். அரசால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளம் மனிதாபிமானப் பணியாளர் காய்லா முல்லரின் பெற்றோர் உட்பட பலர், தங்கள் அனுபவங்களை, இக்கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.