2016-04-29 14:57:00

திருத்தந்தை:அபூர்வ நோயாளரின் துயர் துடைக்க அழைப்பு


ஏப்.29,2016. அபூர்வ நோய்கள் குறித்த விவகாரத்தை உலகெங்கும் அறியச் செய்து, அந்நோய் குறித்த ஆய்வுகளுக்கு நிதியுதவி அதிகரிப்பதற்கு, சட்ட மற்றும் பொருளாதார முறையில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித உயிரணுக்கள், திசுக்கள் மற்றும் உடல் உறுப்புக்களை மீண்டும் உருவாக்குவது, மாற்றுவது அல்லது இயல்பு நிலையில் இயங்கச் செய்வது குறித்த, பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் 700 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

அபூர்வ நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்து, அவர்களுடன் தோழமையுணர்வு கொள்ளவும், இந்நோய் குறித்த ஆய்வுகள் அதிகரிக்கப்படவும், இவர்களுக்குப் போதுமான பராமரிப்புக்கு உறுதி வழங்கப்படவும் உலகினருக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

உலகெங்கும் இலட்சக்கணக்கான மக்கள் அபூர்வ நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, இந்நோயாளர்களின் குடும்பங்கள் உட்பட, இவர்களைப் பராமரிப்பவர்களுக்கு, மிகுந்த கவலையையும், துன்பங்களையும் இந்நோய்கள் ஏற்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இக்கருத்தரங்கு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாய் உள்ளது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நோயாளர்களின் துன்பங்களை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளில், மேலும் பல நிறுவனங்களும் மக்களும் இணைவார்கள் என்ற தனது நம்பிக்கையையும் வெளியிட்டார்.

வத்திக்கானில், ஏப்ரல் 28, இவ்வியாழனன்று தொடங்கிய, சிறார் புற்றுநோய் மற்றும் அபூர்வ நோய்கள் குறித்த மூன்று நாள் கருத்தரங்கை, திருப்பீட கலாச்சார அவையும், மூல உயிரணு வாழ்வு அமைப்பும், STOQ என்ற அறிவியல் மற்றும் விசுவாச அமைப்பும் இணைந்து நடத்துகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.