2016-04-29 14:52:00

திருத்தந்தை : கிறிஸ்தவர்க்கு இரட்டை வாழ்வு கூடாது


ஏப்.29,2016. புறத்தோற்றத்தில் வெளிச்சமாகவும், இதயங்களில் இருள் நிறைந்தும் வாழும் இரட்டை வாழ்வு குறித்து எச்சரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பேசுவது ஒன்றும், செய்வதும் ஒன்றுமாக வாழ்கின்ற இரட்டை வாழ்வை  கிறிஸ்தவர்கள் வாழக் கூடாது என்றும், இருளான பாதைகளில் கடவுளின் உண்மைகளைக் கண்டுகொள்ள முடியாது என்பதால், ஒளியில் நடக்குமாறும், கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

புனித சியன்னா கத்ரீன் விழாவாகிய இவ்வெள்ளிக்கிழமை காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், தூய யோவான் எழுதிய முதல் திருமடலிலிருந்து தனது மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, பாவத்திற்கும், இறையருளுக்கும் எதிரான நித்திய போராட்டம் பற்றிக் கூறினார்.

நாம் தவறிழைக்கும்போது, கடவுளின் மன்னிப்பையும், அவரது கனிவையும் தேட வேண்டும், அதுவே ஒளியின் வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்றும், இதுவே கிறிஸ்தவ வாழ்வு என்றும், நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் பொய்யர்கள் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

பிள்ளைகளே என்று, தூய யோவான் தனது மடலைத் தொடங்குவது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தப் பாசமுள்ள வாழ்த்து, தாத்தா, தனது இளம் பேரக்குழந்தைகளை  அழைக்கும் தொனி போன்று உள்ளது என்றும், இம்மடலிலுள்ள கனிவும் ஒளியும்  இதில் வெளிப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாவம் செய்யாதீர்கள், யாரேனும் பாவம் செய்தால், அதைப் பார்த்து சோர்ந்து விடாதீர்கள் என்று தூய யோவான் சொல்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, நாம் பாவம் செய்துவிட்டால், நம்மை மன்னிப்பதற்குக் காத்திருப்பவரை நோக்க வேண்டும் என்றும் கூறினார்.

கடவுள் ஒளியாய் இருப்பதால் நாம் ஒளியில் நடக்க வேண்டும் என்றும், ஒளியில் ஒரு காலும், இருளில் ஒரு காலும் வைத்து நடக்கக் கூடாது என்றும், பொய்யர்களாக வாழக் கூடாது என்றும் மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.