2016-04-28 16:19:00

திருத்தந்தை வர்த்தகத்திற்கு எதிரானவரல்ல - கர்தினால் டர்க்சன்


ஏப்ரல்,28,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வர்த்தகத்திற்கு எதிரானவர் அல்ல, மாறாக, வர்த்தகச் சந்தையை ஒரு கடவுள் போல மாற்றும் போக்கினை கண்டனம் செய்பவர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சுரங்கத் தொழிலையும், வேளாண்மையையும் மையப்படுத்தி, சாம்பியா நாட்டின் லுசாக்கா நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில், திருப்பீட நீதி அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

நமது பொதுவான இல்லத்தைக் காப்பது மற்றும், சுரங்கத்தொழிலிலும் வேளாண்மையிலும் பெரும் முதலீடு செய்வது என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இக்கருத்தரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையை வழங்கினார்.

கத்தோலிக்கரும் படைப்பும், கத்தோலிக்கரும் பேணுதலும், வேளாண்மையிலும், சுரங்கத் தொழிலிலும் படைப்பைப் பேணுதல் என்ற மூன்று முக்கியக் கருத்துக்களை தன் உரையில் பகிர்ந்துகொண்டார், கர்தினால் டர்க்சன்.

படைப்பின் வழியே மக்கள் இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளை ஒரு சிலரின் சுயநலம் அபகரித்துக்  கொள்வதால், வறியோருக்கு இக்கொடைகள் சென்றடைவதில்லை என்பதையே, திருத்தந்தையின் திருமடல் நமக்கு உணர்த்துகிறது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஓர் அழகிய தோட்டத்தைப் பெற்றுக்கொண்ட நாம், அடுத்தத் தலைமுறையினருக்கு ஒரு பாலைவனத்தை விட்டுச்செல்லக் கூடாது என்ற வேண்டுகோளுடன், கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.