2016-04-28 16:02:00

திருத்தந்தை: தூய ஆவியார் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்


ஏப்ரல்,28,2016. முந்தையக் காலத்தைப் போலவே, இன்றும் தூய ஆவியாரின் செயல்பாடுகளுக்குத் தடைகளும், மறுப்பும் நம்மிடையே உள்ளன எனினும், அவற்றைத் தாண்டி, தூய ஆவியார் இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், எருசலேமில் நடைபெற்ற சங்கம் குறித்து திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள பகுதியை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.

திருஅவையின் துவக்கக் காலத்தில், தூய ஆவியார் திருத்தூதர்களை பல வழிகளில் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, புது வழிகளைக் காட்டினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

வேகவைக்கப்பட்டக் கிழங்கை, சுடச்சுடக் கரங்களில் ஏந்தியிருப்பதை, தூய ஆவியார் செயலாற்றும் வழிகளுக்கு ஓர் உருவகமாகக் கூறியத் திருத்தந்தை, அத்தகையச் சூழலில் வாழ்ந்த திருத்தூதர்களும், சீடர்களும் எருசலேம் சங்கத்தில் கூடியிருந்தனர் என்று சுட்டிக்காட்டினார்.

விருத்தசேதனம் பெறாதவர்களை திருஅவையில் ஏற்றுக்கொள்வதில் துவங்கிய மாற்றங்கள், தூய ஆவியாரின் அருளால், இன்றளவும் நம் மத்தியில் தொடர்கின்றன என்றும், மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் இன்றும் நம் நடுவே தயக்கங்களும், எதிர்ப்புக்களும் எழுகின்றன என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

திருஅவை வரலாற்றில் அன்று முதல், இன்று வரை தூய ஆவியார் வழங்கிவரும் ஆச்சரியங்களைப் புரிந்துகொள்ளும் வரத்தையும், தூய ஆவியாரின் வழி நடத்துதலின்படி வாழும் வரத்தையும் வேண்டுவோம் என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.