2016-04-27 16:29:00

புலம்பெயர்வு ஆசிய-பசிபிக் பகுதியின் வளர்ச்சிக்கு வாய்ப்பு


ஏப்.27,2016. மக்கள் நாடுவிட்டு நாடு சென்று குடிபெயர்வது, இக்காலத்தில் வேகமாக இடம்பெற்றுவரும்வேளை, ஆசிய-பசிபிக் பகுதி, இதற்கேற்ப திட்டங்களை வகுக்கவில்லையெனில், வருங்காலத்தில், வளர்ச்சியையும், முதலீடுகளையும் ஊக்குவிப்பதற்கான சிறந்த வாய்ப்பை இழக்கக் கூடும் என்று, ஐ.நா. அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

ஆசிய-பசிபிக் நாடுகள், தற்போது வேலைசெய்யும் வயதுடைய மக்களை அதிகமாகவும், சார்பு நிலையில் உள்ளவர்களைக் குறைவாகவும் கொண்டிருப்பதால், இந்நிலை வளர்ச்சிக்கு அதிகம் உதவும் என்றுரைத்துள்ள, UNDP  என்ற ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பு, ஏமாற்ற நிலையில் வாழும் இளையோர் மற்றும் அப்பகுதியின் நிலையற்றதன்மை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிய-பசிபிக் பகுதியில், 68 விழுக்காட்டினர், வேலைசெய்யும் வயதுடைய மக்கள் மற்றும் 32 விழுக்காட்டினர் சார்பு நிலையில் உள்ளவர்கள் என்றுரைக்கும் அவ்வமைப்பு,    வேலைசெய்யும் திறனுள்ள மக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகள், தங்களின் பொருளாதாரத்தை மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டுள்ளன என்றும் கூறியது.   

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.