2016-04-27 16:08:00

திருத்தந்தையின் மறைக்கல்வி : 'நீரும் போய் அப்படியே செய்யும்'


ஏப்.,27,2016. இதமான வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக, நல்லதொரு தட்ப வெப்ப நிலையைக் கொடுத்துக் கொண்டிருந்த சூழலில், இத்தாலி முழுவதும் வழக்கத்திற்கு மாறாக, இந்த வாரத்தில் குளிர் காற்று மீண்டும் வீசத் துவங்கியுள்ளது. இப்புதனன்று காலையும், குளிர் காற்று மிதமாக வீசிக்கொண்டிருக்க, உரோம் நகரின் தூய பேதுரு வளாகம் திருப்பயணிகளால் நிரம்பி வழிந்தது. திருத்தந்தையும் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது,  இந்திய நேரம் நண்பகல் 1.30 மணிக்கு, தன் புதன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார்.  நல்ல சமாரியர் உவமையைக் கூறி முடித்த இயேசு, தன்னிடம் கேள்வி கேட்ட திருச்சட்ட அறிஞரை நோக்கி, ‘நீரும் போய் அப்படியே செய்யும்’ என உரைத்த வார்த்தைகளை மையமாக வைத்து, தன் மறைக்கல்வியை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இவ்வார மறைக்கல்வி உரையில், இயேசுவின் நல்ல சமாரியர் உவமை குறித்து சிந்திப்போம். இறைவன் மீதும், நம் அடுத்திருப்பவர் மீதும் கொண்டிருக்க வேண்டிய அன்பு குறித்த மிக உயரிய கட்டளையை நமக்கு  கற்றுத் தந்துள்ளார் இயேசு. 'எனக்கு அடுத்திருப்பவர் யார்' என தன்னிடம் கேட்கப்பட்டக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இயேசு, 'சாலையோரத்தில் உதவித் தேவைப்படும் நிலையில் குற்றுயிராகக் கிடந்த ஒருவரைக் கண்ட பின்னரும் உதவாமல் சென்ற குருவையும், லேவியரையும் குறித்து எடுத்துரைக்கிறார். அவர்களின் மதக்கோட்பாடு என்பது உண்மைத்தன்மை உடையதாக இல்லை. ஏனெனில், அது பிறருக்கான சேவையில் தன் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அன்பு என்பது, புலனாகாத ஒன்றோ, அல்லது, நம்மைவிட்டு தூரத்தில் இருக்கும் ஒன்றோ அல்ல, மாறாக, ஒன்றைப் பார்க்கவும் அதற்குப் பதிலுரைக்கவும் வல்லது என நமக்குச் சொல்கிறார் நம் இறைவன். இந்த உவமையில், சமாரியர் காட்டிய இரக்கம், முடிவற்ற இறைஇரக்கத்தின் ஓர் உருவகமாகும். இரக்கம் நிறைந்த நம் இறைவன், நம் தேவைகளை உற்று நோக்கி, தம் அன்புடன் நமக்கு மிக நெருக்கமாக வருகிறார்.  ஆகவே, 'கடவுளாகிய ஆண்டவரிடமும், அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வது' என்பது முற்றிலும் இயலக் கூடியதே.

இயேசு கிறிஸ்துவே, நல்ல சமாரியருக்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார். நம் அடுத்திருப்பவர் மீது அக்கறை காட்டுவதற்கு, அதிலும் குறிப்பாக, நம்மையே தியாகம் செய்யும் அளவுக்கு அன்பு கூர்வதற்கு அவரே மாதிரிகையாக உள்ளார். 'அடுத்திருப்பவர்' என்பது, உதவித் தேவைப்படுபவரை மட்டும் குறிக்கவில்லை, மாறாக, அந்த உதவித் தேவைப்படும் வேளையில், இரக்கத்துடன் சென்று அணுகுபவரை அதிகமாகக் குறித்து நிற்கிறது என்பதை, இந்த உவமையின் இறுதியில் நாம் பார்க்கிறோம். ‘நீரும் போய் அப்படியே செய்யும்’ என நம்மை நோக்கி உரைக்கும் இயேசு, நாமனைவரும் 'அடுத்திருப்பவர்களாகச்' செயல்படுமாறு கேட்கிறார். அவருடைய அன்பையும் இரக்கத்தையும் பின்பற்றுவதன் வழியாக, நாமும் அவரின் உண்மையான சீடர்கள் என்பதை உலகிற்கு காட்டுகிறோம்.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.