2016-04-26 13:45:00

திருஅவை நிலத்தில் தடுப்புவேலி கட்டுவதற்கு ஆயர் மறுப்பு


ஏப்.26,2016. ஆயுத மோதல்கள் மற்றும் வறுமையினால் தங்கள் நாடுகளைவிட்டுப் புலம்பெயரும் மக்கள், ஆஸ்ட்ரியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்தில், எல்லையில் தடுப்பு வேலி அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் ஒருவர்.

ஆஸ்ட்ரிய அரசு அதிகாரிகள், திருஅவைக்குச் சொந்தமான நிலத்தில், தடுப்புவேலி கட்டுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள, Eisenstadt கத்தோலிக்க ஆயர் Aegidius Zsifkokvics அவர்கள், அரசின் இச்செயல், திருத்தந்தையின் விருப்பத்திற்கு முரணானது என்று கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பாவுக்குத் தெளிவாகச் சொல்லியிருப்பது போன்று, புலம்பெயர்ந்தவர்களைத் தடுப்பதற்கென அமைக்கப்படும் வேலி, நற்செய்தியின் உணர்வுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார் ஆயர் Zsifkokvics.

பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த மக்கள் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு  கடந்த ஆண்டில் உதவிய ஆஸ்ட்ரியா, தற்போது தடுப்புவேலி கட்டுவதற்குத் திட்டமிடுவது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் ஆயர் Zsifkokvics.

ஆஸ்ட்ரிய அரசு, ஹங்கேரி நாட்டு எல்லையில், Moschendorfவுக்கு அருகில், வேலி அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள இடத்தில், திருஅவைக்குச் சொந்தமான இரு நிலங்கள் உள்ளன.

ஆதாரம் : AFP /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.