2016-04-25 14:05:00

வாரம் ஓர் அலசல் – நல்தூண்டுதல்களை நழுவவிடாதிருப்போம்


ஏப்.25,2016. 33 வயது நிரம்பிய அருள்சகோதரி Clare Crockett அவர்கள், இம்மாதம் 16ம் தேதி சனிக்கிழமையன்று ஈக்குவதோர் நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்த நானூறுக்கும் மேற்பட்ட மக்களில் ஒருவர். இச்சகோதரி வாழ்ந்துவந்த கன்னியர் இல்லம் இடிந்து விழுந்ததில், இன்னும் நான்கு பயிற்சி நிலை இளம்பெண்களும் மண்ணுக்குள் புதைந்துவிட்டனர். அருள்சகோதரி Clare, வட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். வட அயர்லாந்தில், கத்தோலிக்கருக்கும், பிரிந்த சபையினருக்கும் இடையே பதட்டநிலை இருந்து வந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவர். அந்த வன்முறைச் சூழலில் இச்சகோதரி, கடவுள் பற்றி நினைத்துப் பார்க்கவே இல்லை. இவர், தனது வளர்இளம் பருவத்தில் ஒரு நடிகையாக வேண்டும் என்று விரும்பினார். 18 வயது நிரம்பியபோது, நண்பர்களோடு சேர்ந்து, கேளிக்கைகளில் நேரத்தைச் செலவிட்டார். மனம்போன போக்கில் வாழ்க்கை நடத்தி, தனது பணத்தையெல்லாம், மது அருந்துவதற்கும், சிகரெட்டுக்கும் செலவழித்தார் இவர். ஒரு நாள், நண்பர் ஒருவர் இவரிடம், இஸ்பெயின் நாட்டுக்கு, இலவசமாக, சுற்றுலாப் செல்வதற்கு விருப்பமா என்று கேட்டார். அந்தப் பயணம், நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் இருக்கும் மனிதர்களோடு செல்லும் பத்து நாள் திருப்பயணம். கிளேருக்கு சுற்றுலா செல்வதற்கு விருப்பமில்லை. அதிலிருந்து விலகிக் கொள்ள இவர் முயற்சித்தபோது, இவரது பெயர் பயணிகள் பட்டியலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே கட்டாயமாகச் செல்லவேண்டிய சூழல். இந்தப் பயணமே, கிளேர் அவர்களின் வாழ்வைத் திசை திருப்பியிருக்கிறது. அருள்சகோதரி கிளேர் சொல்லியிருக்கிறார் – நான் சுற்றுலாவை அனுபவிக்கக் கூடிய பெண் அல்ல. சுற்றுலா சென்று, கூடாரங்கள் அமைத்து வாழத் தெரியாது, ஆயினும், என் விருப்பமின்றி நான் இஸ்பெயினுக்குச் சென்ற இப்பயணத்தில் அன்னை மரியா என் வாழ்வுப் பாதையை மாற்றினார். சிலுவையில் இயேசு இறந்தது பற்றிச் சிந்திக்கும் அருளை ஆண்டவர் அருளினார். நான் கட்டாயமாக என் வாழ்வை மாற்ற வேண்டும், நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்செல்ல வேண்டுமென்று உணர்ந்தேன் என்று பகிர்ந்து கொண்டுள்ளார். Hi Lucy என்ற சிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இச்சகோதரி குரல்கொடுத்து வந்தவர். ஆனால், திடீரென்று அவர் வாழ்வு நிலநடுக்கத்தில் முடிந்துவிட்டது. 

அன்பு நேயர்களே, எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுக்காமல், காலத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போனால், கடந்த காலமும், அந்தக் கணப்பொழுது நற்சிந்தனையும் மீண்டும் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அருள்சகோதரி கிளேர் அவர்கள், தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பையும், நல்ல தூண்டுதலையும் அலட்சியம் செய்திருந்தால், அவர், ஈக்குவதோர் சிறாருக்குச் சிறந்த சேவை செய்தவர் என்ற நல்ல பெயரைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அதோடு அவரும், மதுவிலும், சிகரெட்டிலுமே தனது வாழ்வைச் செலவழித்திருக்கக் கூடும். காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள். அதேபோல் காலம் கடத்தப்படும் எதுவும் சரியானதாக அமையாது. செய்ய வேண்டிய காரியத்தை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் வாய்ப்புகள் வாசலை எப்போதும் தட்டுவதில்லை. நல்தூண்டுதல்கள கிடைப்பதை நழுவவிடக் கூடாது.

எலும்பு நிபுணர் மருத்துவர் பிரகாஷ் அவர்களுக்கு, 13 ஆண்டு சிறை வாழ்க்கை தந்த அனுபவத்தையும், சிறையிலிருந்து அவர் வெளிவந்த பின்னர் வாழும் முறையையும் பத்திரிகை ஒன்றில் வாசித்தோம். மருத்துவர் பிரகாஷ் அவர்கள் சொல்கிறார்...

சிறையில் முதல்நாள் அனுபவம் மிகக் கொடூரமானது. என் கண்முன் இருக்கும் இரும்புக் கதவில் நீளமான ஆறு கம்பிகள், எத்தனைமுறை எண்ணினாலும் ஆறிலிருந்து ஏழு ஆகாது. எனக்குத் தனிமை வேண்டும். ஆனால், அந்தத் தனிமை கொடுமையானது. அந்தச் சமயம், என் மனதுக்குள் ஆத்திரமும் கோபமும் பொங்கி வந்தது. என்மேல் புகார் கொடுத்த இளைஞர் மேல் கோபம்; என்மேல் நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் மேல் கோபம்; குண்டர் சட்டத்தில் என்னை வைத்த ஆர்டரில் கையெழுத்துப் போட்ட காவல்துறை கமிஷனர் மேல் கோபம்; எனக்குக் குண்டர் சட்டம் தண்டனை வழங்கியது சரி என்று, தீர்ப்புக் கொடுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மேல் கோபம்; பிளாக்கில் இருந்து செல்லுக்கு மாற்றிய சிறை அலுவலகர் மேல் கோபம்; இந்தச் சிறையைக் கட்டிய வெள்ளைக்காரன் மேல் கோபம்; எல்லாக் கஷ்டத்திலும் என்னை அம்போவென்று விட்டுவிட்டு விலகிப்போன மனைவி மேல் கோபம். இப்படிக் கோபத்தில் சுவரில் என் கையால் ஓங்கி அடித்தேன். சடக்குன்னு ஒரு சத்தம். எலும்பு நிபுணரான எனக்கு அது முறிவுதான் என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் என் மேலேயே எனக்குக் கவலை வந்து அழத் தொடங்கினேன். இந்த மாதிரி வாழ்க்கையைவிட சாவு எவ்வளவோ மேல் என்று முடிவு செய்தேன். மருத்துவர் ஆகிய எனக்கு தன் உயிரையே தொலைப்பதற்கு ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரு போதி மரத்தின் அடியில் உட்கார்ந்துதான் கௌதம புத்தருக்கு ஞானோதயம் வந்தது. இது மாதிரி ‘சிபி-3 சிறை’க்குள் உட்கார்ந்து இருந்த எனக்கும் ஞானோதயம் வந்தது. என் உடைந்த கையைப் பார்த்து இதனால் யாருக்கு நஷ்டம் என்ற கேள்வி எழுந்தது. எனக்குக் கஷ்டம் கொடுத்த யாருக்கும் என் உடைந்த கை வேதனையைக் கொடுக்காது. இப்போதுதான் எனக்குப் புரிந்தது. அவர்கள் எல்லாம் சேர்ந்து என் உடம்பைத்தான் சிறைக்குள் வைக்கலாம். என் மனதை சிறையில் வைக்கும் உரிமை எனக்கு மட்டும்தான். ஒரே நிமிடத்தில் கண்ணை மூடினால் என் மனது எங்கே வேண்டுமானாலும் பறந்துவிடும். நான் போன ஊர்களுக்கெல்லாம் சென்று கண்ட காட்சிகளை மனதுக்குள்ளேயே கற்பனை செய்யலாம். என் மனதின் சுதந்திரத்தை யாரும் பறிக்க முடியாது. இந்தத் தத்துவம் புரிந்தவுடன் மனது மிகவும் இலேசாகிவிட்டது. சிறையில் இன்றிலிருந்து ஒரு புதுவாழ்க்கை ஆரம்பிக்கப் போகிறது என, என் வாழ்க்கையைத் தொடங்கினேன்.”

அன்பர்களே, எலும்பு நிபுணர் மருத்துவர் பிரகாஷ் அவர்களுக்கு, சிறைக்குள் அந்த நொடிப்பொழுதில் ஏற்பட்ட உள்தூண்டுதல், இன்று அவரை மாற்றி இருக்கின்றது என்று பத்திரிகை செய்தியிலிருந்து அறிந்தோம். நான் மொத்தமாகச் சிறைக்குள் இருந்தது 4,831 நாட்கள். சிகிச்சையளித்தவர்களின் எண்ணிக்கை 11,248 பேர் என்று, கைதிகளுக்கு சிகிச்சைகள் செய்ததையும் பகிர்ந்துகொண்டுள்ளார். சில கைதிகள் சிறையில் இருந்து தப்பித்து ஓட முயலும்போது தவறி விழுந்தோ, சித்ரவதையில் காயம்பட்டோ, எலும்பு முறிவுகள் ஏற்படும். எக்ஸ்-ரே இல்லாமல் அடிபட்ட இடத்தில் நான் பயின்ற மருத்துவக் குறிப்புகளை நினைவுகூர்ந்து சிகிச்சை கொடுத்து, அவர்களில் பலரைக் குணமாக்கினேன். என் மனதை யாராலும் சிறைவைக்க முடியாது என்று சொல்லியிருக்கும் இவர், சிறையிலிருந்து வெளிவந்த ஒன்பது மாதங்களுக்குள் தான் விட்ட இடத்திலிருந்து தன்னையும், தனது மருத்துவத் தொழிலையும் மீட்டெடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார்.

அன்பு நெஞ்சங்களே, ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு சூழலில் நல் தூண்டுதல்கள் ஏற்படுவதுண்டு. அது வழிபாட்டு நேரத்திலோ, பிறருடன் பேசிக்கொண்டிருக்கும்போதோ, நல்ல நூல்களை வாசிக்கும்போதோ, துன்பங்களைச் சந்திக்கும்போதோ, பிறரின் துன்பங்களைப் பார்க்கும்போதோ.. இப்படி எந்நேரத்திலும் கிடைக்கலாம். ஆனால் அவற்றை அலட்சியம் செய்துவிடக் கூடாது.

மனிதர் எப்போது தேங்குகிறாரோ அப்போதே அவர் நதியாக இல்லாமல் குட்டையாகி விடுகிறார். ஒரு விதை வெற்றி பெறுவதற்கு மரம் எத்தனைமுறை பூக்க வேண்டியிருக்கிறது. எவ்வளவு காய்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. சிந்தித்துப் பார்ப்போம். இத்தாலியக் கவிஞர் யூஜினியோ மொந்தாலி அவர்கள், உன் அருகில் மிதந்து செல்லும் இறகும் கூட உன் வடிவத்தை வரையக் கூடும் என்று சொன்னார். எனவே எதுவும் நல் எண்ணத்தைத் தூண்டலாம். தவற விடவேண்டாம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.