2016-04-25 14:13:00

திருத்தந்தை - அன்பே கிறிஸ்தவரின் அடையாள அட்டை


ஏப்.25,2016. அன்பே கிறிஸ்தவரின் அடையாள அட்டை, இதுவே கிறிஸ்தவர்களாக நம்மை அடையாளப்படுத்திக் காட்டும் தகுதியுடைய ஒரே ஆவணம் என்றும், இந்த ஆவணம் காலாவதியாகி விட்டாலும், தொடர்ந்து புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும், நம் போதகராகிய இயேசுவுக்குச் சான்று பகர்வதை நாம் நிறுத்தி விடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறினார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், தங்களின் யூபிலியைச் சிறப்பித்த, 13 வயதுக்கும் 16 வயதுக்கும் உட்பட்ட எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட வளர் இளம் பருவத்தினருக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

நீங்கள் இயேசுவின் அன்பை அனுபவிக்க விரும்புகின்றீர்களா? என்று வளர் இளம் பருவத்தினரைக் கேட்ட திருத்தந்தை, இயேசுவின் அன்பை அனுபவிக்க அவரின் திருச்சொற்களிலிருந்து கற்றுக்கொள்வோம், ஏனெனில், அவரின் திருச்சொற்கள், வாழ்வின் கல்விக்கூடம், அப்பள்ளியில் அன்புகூர கற்றுக்கொள்கிறோம் என்றும் கூறினார்.

அன்பு, அழகானதாக இருந்தாலும், அது மகிழ்வின் பாதை என்றும், அது எளிதான பாதையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு முயற்சி அவசியம் என்றும் கூறினார் திருத்தந்தை.

நாம் விரும்பும் பொருள்களைக் கொண்டிருப்பதிலிருந்தோ அல்லது நாம் விரும்புவதைச் செய்வதிலிருந்தோ சுதந்திரம் வருவதில்லை, ஆனால், உண்மையான சுதந்திரம் மற்றும் அன்பை, இயேசுவில் அன்பில் மட்டுமே காண முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

உங்களின் மகிழ்ச்சிக்கு விலை கிடையாது, அதை விலைக்கு வாங்கவும் முடியாது, உங்களின் கைபேசியில் தரவிறக்கம் செய்யக்கூடிய செயலி அல்ல அது, செயலியில் புதிதாகத் தரவிறக்கம் செய்யப்படுபவையும், அன்பில் சுதந்திரத்தையும், பெருமித உணர்வையும் கொடுக்காது என்றும், வளர்இளம் பருவத்தினரிடம் கூறினார் திருத்தந்தை.

அன்பு, இலவசமாக வழங்கப்படும் கொடையாகும், அதற்குத் திறந்த இதயம் தேவை என்றும், இது, வாழ்வு முழுவதும் செய்யப்பட வேண்டிய உன்னதப் பொறுப்பாகும், பெரிய கனவுகளை எட்ட விரும்புவர்களுக்கு, இது அன்றாடக் கடமையாகும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நிறைய வளங்களைக் கொண்டிருந்தால்தான், வாழ்வு அழகானது என்று சொல்பவர்களையும், உண்மையான அரும்பொருள்களிலிருந்து உங்களை திசை திருப்புவர்களையும் நம்பாதீர்கள் என்று 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களிடம் உரைத்த திருத்தந்தை, நீங்கள் கிறிஸ்துவோடு நட்பாக இருப்பதால், ஒருபொழுதும் தனிமையை உணரமாட்டீர்கள் என்றும் கூறினார். 

ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து, பயிற்சி எடுப்பதன் வழியாக, உயர்ந்த இலக்குகளை எட்டும் விளையாட்டு வீரர்கள் போன்று, ஒவ்வொரு நாளும், இரக்கத்தின் செயல்களை   ஆர்வத்துடன் செய்து, வாழ்வின் வீரர்களாகத் திகழுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.