2016-04-25 14:35:00

ஐ.எஸ். படுகொலைக்கு எதிராகச் செயல்பட பிரிட்டனுக்கு அழைப்பு


ஏப்.25,2016. கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை மதத்தவர்க்கெதிரான ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் அடக்குமுறை அட்டூழியங்களை, இனப்படுகொலை என்று பெயரிடுவதற்கு, பிரிட்டன் அரசு சிந்தித்துவரும்வேளை, பிரிட்டன் பாராளுமன்றம் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

மத்திய கிழக்கில், கிறிஸ்தவர்களுக்கும், பிற சிறுபான்மை மதத்தவர்க்கும் எதிராக நடத்தப்படும் கொடூரச் செயல்கள், இனப்படுகொலையைத் தவிர வேறு இல்லை என்பதற்கு நாங்கள் சாட்சிகள் என்று, Shrewsbury ஆயர் Mark Davies அவர்கள் கூறியுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தின் கீழ்சபை, ஐ.எஸ். அரசின் அட்டூழியங்களை, இனப்படுகொலை என்று, ஒரேமனதாக ஏற்றுள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஆயர் Davies அவர்கள், இவ்விவகாரத்தில், பிரித்தானிய பாராளுமன்றம், மற்ற அரசுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களோடு ஒத்துழைக்குமாறு கேட்டுள்ளார்.

ஈராக்கிலும் சிரியாவிலும், கிறிஸ்தவர்களும், யஜிதிகளும், பிற சிறுபான்மை இனத்தவரும், மதத்தவரும், தாங்கள் முழுவதுமாக அழிக்கப்படும் நிலையை எதிர்நோக்குகின்றனர் என்றும், இவர்கள், பன்னாட்டு சமுதாயத்தின் ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஆயர் Davies.

ஆதாரம் : CNA /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.