2016-04-25 13:50:00

Velletri கைதிகளின் கடிதத்திற்கு திருத்தந்தை பதில் கடிதம்


ஏப்.25,2016. கைதிகள், சிறையில் இருக்கும் காலத்தை, ஒருபோதும் முடிவுறாத காலம் போன்ற ஓர் அனுபவத்தைப் பெறுகின்றனர், ஆனால், உண்மையான காலம், கடிகாரம் காட்டுவது அல்ல, உண்மையான காலம், நம்பிக்கை என அழைக்கப்படுகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் Velletri சிறைக் கைதிகள் தனக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை, கைதிகள் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வில், விசுவாச ஒளியின், நம்பிக்கைச் சுடரை நன்றாக ஏற்றுமாறு கேட்டுள்ளார். 

கைதிகளாகிய நீங்கள் எழுதியிருப்பது போன்று, நாம் இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இருக்கிறோம், இவ்வாண்டில் கைதிகளுக்கென ஒரு நாள் யூபிலியைச் சிறப்பிக்க விரும்புகிறேன், அச்சமயத்தில் உங்கள் அனைவரோடும், ஆன்மீக முறையில் செபத்தில் ஒன்றித்திருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை

திருஅவை வரலாற்றில், ஏராளமான புனிதர்கள், கடும் இன்னல் நிறைந்த அனுபவங்கள் வழியாக புனித வாழ்வை அடைந்துள்ளனர், எனவே, உங்கள் இதயங்களைக் கிறிஸ்துவுக்குத் திறந்து விடுங்கள், கிறிஸ்துவோடு எல்லாம் இயலக் கூடியதே என்றும், Velletriயிலுள்ள  சிறைக் கைதிகளுக்கு எழுதிய மடலில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அல்பானோ ஆயர் Marcello Semeraro அவர்கள், கடந்த மார்ச் 5ம் தேதி, Velletri சிறைக் கைதிகளைச் சந்தித்து, அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றினார். அச்சமயத்தில், கைதிகள், திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை ஆயரிடம் கொடுத்தனர். ஆயரிடமிருந்து பெற்ற அக்கடிதத்திற்கு, இத்திங்களன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “குடும்ப வாழ்வை அன்புகூரவும், அதை அனுபவிக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம், ஏனெனில், குடும்பங்கள் பிரச்சனை அல்ல” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று வெளியிடப்பட்டது.

மேலும், ஹாலந்து அரசர் Willem-Alexander, அரசி Máxima மற்றும் கத்தோலிக்க அருங்கொடை இயக்க கூட்டமைப்பின் பத்து பிரதிநிதிகளை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.