2016-04-23 15:58:00

கும்பமேள பயணிகளுக்கு திருஅவை நலவாழ்வுப் பணிகள்


ஏப்.23,2016. மத்திய இந்தியாவில் தொடங்கியுள்ள மகா கும்பமேள இந்து மத விழாவுக்கு வருகை தருகின்ற திருப்பயணிகளுக்கு நலவாழ்வுப் பணிகளை ஆற்றி வருகிறது தலத்திருஅவை.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 22, இவ்வெள்ளிக்கிழமையன்று தொடங்கியுள்ள மகா கும்பமேள விழாவுக்கு வரும் பயணிகளுக்கு, அரசோடு சேர்ந்து நலவாழ்வுப் பணிகளை ஆற்றுவது குறித்துப் பேசிய, உஜ்ஜய்ன் ஆயர் செபஸ்டியான் வடக்கெல் அவர்கள், திருப்பயணிகள், கடவுளைத் தேடி இங்கு வருகின்றனர் என்றும், துன்பங்களிலிருந்து விடுதலை பெற்ற கடவுள் அனுபவத்தை, அவர்கள் பெறுவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை உதவ விரும்புகின்றது என்றும் கூறினார்.

இந்த நோக்கத்தோடு, மருத்துவ உதவி தேவைப்படும் திருப்பயணிகளுக்கு, உஜ்ஜய்ன் மறைமாவட்டம், ஐம்பது படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவமனை ஒன்றைத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார் ஆயர் செபஸ்டியான்.

ஏப்ரல் 22ம் தேதி முதல், மே 21ம் தேதி வரை நடைபெறும் மகா கும்பமேள இந்து மத விழாவிற்கு, ஏறக்குறைய ஐந்து கோடிப் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேள இந்து மத விழா நடைபெறுகின்றது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.