2016-04-23 16:22:00

ஏப்ரல் 23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்


ஏப்.23,2016. புத்தகங்களே எதிர்காலத் தலைமுறையினருக்குச் சொத்து என்பதை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தியிருப்பவர் கோட்டையூர் முத்தையா.

புத்தகங்கள் இல்லாத இல்லம், ஜன்னல்கள் இல்லாத வீட்டைப் போன்றது என்பது போல, புத்தகங்களை நேசித்து அவற்றைச் சேமித்து எதிர்காலத் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதை இக்காலத் தலைமுறையினருக்கு உணர்த்தியவர் காரைக்குடி அருகே கோட்டையூரைச் சேர்ந்த முத்தையா.

1926ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி பிறந்த முத்தையா அவர்கள், தனது வாழ்நாளில் சேகரித்த புத்தகங்கள் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகம். இவற்றில் பழமையான தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களும், மருத்துவம், தத்துவம், வரலாறு, இசை, நாடகம், கலைக்களஞ்சியத் தொகுப்புகள், நாட்டுப் புறப் பாடல்கள், அகராதிகள் ஆகிய வையும் அடங்கும். இதைத் தவிர 2 இலட்சம் சிறுகதைகள், 5 இலட்சம் தினச்செய்தி துணுக்குகள், புத்தரைப் பற்றிய 2,000 கட்டுரைகள், ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், விலங்குகள் தொடர்பான 5,000 கட்டுரைகள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதழ்கள், 15 இலட்சம் பழமொழிகள், செட்டிநாட்டு நகரத்தார் சமூகச் சடங்குகள் பற்றிய ஏடுகள், 750 மரச்சிற்பங்கள், விற்பனைப் பத்திரங்கள், அடகுச்சீட்டுகள், 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நாடக - திரைப்படத் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட ஏராளமான சேகரிப்புகளைக் கொண்ட அரிய பெட்டகமாக இவரது வீட்டின் நூலகம் திகழ்கிறது.

மேலும், ஏப்ரல் 23, இச்சனிக்கிழமை உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம். யுனெஸ்கோவால் சிறப்பிக்கப்படும் இந்நாள், 1995ம் ஆண்டில் முதலில் கொண்டாடப்பட்டது. ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள் பிறந்ததும், இறந்ததும் ஏப்ரல் 23 தான். இவ்வாண்டு ஷேக்ஸ்பியர் அவர்கள் இறந்ததன் 400ம் ஆண்டு நினைவுகூரப்படுகிறது. இவர், 1616ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இறந்தார்.

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.