2016-04-23 14:30:00

இது இரக்கத்தின் காலம் : எதிர் நீச்சல் போடுவது, நலம் தரும்


வளர் இளம் பருவத்தினரை (13 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள்), வத்திக்கானுக்கு வருமாறு, அழைப்பு மடல் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு சனவரி மாதம் அனுப்பியிருந்தார். அம்மடலில் திருத்தந்தை கூறியுள்ள சில வரிகள் இதோ:

"இளைய நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவரின் பெயரும் விண்ணகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது, உங்கள் ஒவ்வொருவரையும் நான் பெயர் சொல்லி அழைக்கிறேன். வாழ்வில் அற்புதமான மாற்றங்களை உணரும் பருவத்தில் இருக்கிறீர்கள். அனைத்தும் சாத்தியம் என்றும், சாத்தியமில்லை என்றும் ஒரே நேரத்தில் உங்களுக்குத் தோன்றும் பருவம் இது. இவ்வேளையில், எதிர் நீச்சல் போடத் தயங்காதீர்கள். எதிர் நீச்சல் போடுவது, இதயத்தை நலமாக வைத்திருக்கும் என்று சொல்வார்கள். கொள்கை அளவில், எதிர்நீச்சல் போடுவது, உங்கள் மனதிற்கும் நல்லது. உலகம் காட்டும் வழிகளில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதுபோல், அனைவரும் போகும் வேளையில், அதற்கு எதிர் திசையில் செல்ல, மிகுந்த துணிவு தேவை. உயர்ந்த இலட்சியங்கள் கொண்ட இத்திசையில் செல்ல இந்த யூபிலி ஆண்டில் துணிவு கொள்ளுங்கள்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வளர் இளம் பருவத்தினருக்கு எழுதியுள்ள மடலில் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் அழைப்பை ஏற்று, ஏப்ரல் 23,24,25 ஆகிய மூன்று நாட்களும், பல்லாயிரக்கணக்கான வளர் இளம் பருவத்தினர், உரோம் நகருக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் இறைவன் தன் இரக்கத்தால் நல்வழியில் நடத்திச்செல்ல வேண்டுவோம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.