2016-04-22 15:29:00

வட துருவம் செல்லும் அர்ஜென்டீனா இளையோர்க்கு வாழ்த்து


ஏப்.22,2016. அர்ஜென்டீனா நாட்டு இளையோர், சுற்றுச்சூழலின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுற்றுச்சூழல் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, வட துருவத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அர்ஜென்டீனா இளையோர்க்கு வாழ்த்து தெரிவித்து, செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்திய சுற்றுச்சூழலின் ஆபத்தான நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்பு, முயற்சி, குழுவாகச் சேர்ந்து செயல்படுதல் ஆகியவற்றின் வழியாக, சுவர்களைப் பாலங்களாக மாற்ற இயலும் என்பதை, இந்த இளையோர் மேற்கொண்டுள்ள இப்பயணம் காட்டுகின்றது என்று கூறி, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் அர்ஜென்டீனா நாட்டவரான திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பது பற்றிக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Laudato sì திருமடலையும், இந்த இளையோர் தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

அர்ஜென்டீனாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பாப்பிறை அமைப்பாக மாறியுள்ள Scholas Occurentes என்ற அமைப்பின் ஆதரவுடன், இந்த இளையோர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.