2016-04-22 15:39:00

போதைப்பொருள் ஒழிப்புக்கு உலகளாவிய ஒத்துழைப்பு தேவை


ஏப்.22,2016. போதைப்பொருள்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள், போதைப்பொருள்களைக் கொண்டே வெற்றி காண முடியாது என்று, உலகப் போதைப்பொருள் பிரச்சனை குறித்து, ஐ.நா. பொது அவையின் சிறப்பு அமர்வில் இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் கூறினார்.

போதைப்பொருள்கள் தீயவை என்றும், தீயவைகளோடு சமரசம் செய்வதோ அல்லது அதற்கு இணங்கிப்போவதோ இயலாத செயல் என்றும் கூறினார், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் அவுசா.

சட்டத்துக்குப் புறம்பே போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படுவதையும், அவை பயன்படுத்தப்படுவது சட்டமாக்கப்படுவதையும் திருப்பீடம் புறக்கணிக்கின்றது என்றும் கூறிய பேராயர் அவுசா அவர்கள், எல்லாவிதமான போதைப்பொருள் பயன்பாட்டையும் புறக்கணிக்குமாறு வலியுறுத்தினார்.

அதேநேரம், வாழ்வுக்கும், அன்பு நெறிக்கும், பிறருக்கு உதவுவதற்கும், கல்விக்கும், வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவதற்கும், ஆகட்டும் என்று நாம் சொன்னால், சட்டத்துக்குப் புறம்பே போதைப்பொருள்கள், மதுபானங்கள் மற்றும் போதையை ஏற்படுத்தவல்ல மற்ற பொருள்கள் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பே இருக்காது என்றும் தெரிவித்தார் பேராயர் அவுசா.

போதைப்பொருள் தொடர்புடைய பிரச்சனைகள், நாடுகளின் எல்லைகளைக் கடந்து, உலக அளவில் மக்களைப் பாதிக்கின்றன என்றும், இதற்குத் தீர்வு காண்பதற்கு, அனைத்துலக சமுதாயத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறினார்  பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.