2016-04-22 15:24:00

சுற்றுச்சூழல் குறித்த ஓர் உண்மையான அணுகுமுறை


ஏப்.22,2016. “சுற்றுச்சூழல் குறித்த ஓர் உண்மையான அணுகுமுறையானது, இப்பூமியின் மற்றும் ஏழைகளின் கூக்குரலுக்குச் செவிமடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் நீதியை எப்படிப் பாதுகாப்பது என்பதை அறிந்திருக்கின்றது”என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.

உலக பூமி நாளான ஏப்ரல் 22, இவ்வெள்ளியன்று, பாரிஸ் நகரில், 160க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள, காலநிலை மாற்றம் குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தோடு, திருத்தந்தையின் இந்த டுவிட்டர் செய்தியும்  தொடர்புடையதாக அமைந்துள்ளது. @Pontifex என்ற முகவரியில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் பதிவு செய்யப்படுகின்றன.

மேலும், நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்வில், இந்தியா உட்பட 175 நாடுகள், காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நாடுகளின் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட இந்நிகழ்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், பல ஆண்டுகளாக, பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களால் அலட்சியப்படுத்தப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட, காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்தில், ஒவ்வொருவரும் 40 நொடிகளில், இந்நாளில் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூறினார். 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.