2016-04-22 16:02:00

இளையோர் தினத்திற்குச் செல்லும் இந்தியர்க்கு விசா இலவசம்


ஏப்.22,2016. வருகிற ஜூலையில், போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்தில் கலந்துகொள்ளவிருக்கும் இந்திய இளையோர்க்கு, விசாவை இலவசமாக வழங்கவிருப்பதாக, புதுடெல்லியிலுள்ள போலந்து தூதரகம் அறிவித்தது. 

கட்டணம் இல்லாமல் விசா வழங்குவதற்குத் தீர்மானித்திருப்பது குறித்து அறிவித்த போலந்து தூதர் Tomasz Lukaszuk அவர்கள், உலக இளையோர் தினம், போலந்தில் இரண்டாவது முறையாகச் சிறப்பிக்கப்படவிருப்பது குறித்து மகிழ்வையும் வெளிப்படுத்தினார்.

மேலும், உலக இளையோர் தினம் பற்றி, UCA செய்தி நிறுவனத்திடம் பேசிய, இந்தியாவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள், இளையோரை அதிகமாக அன்புகூர்ந்த புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், திருஅவையின் எதிர்காலத்தை இளையோரில் கண்டு, உலக இளையோர் தினத்தைத் தொடங்கினார் என்றார்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் (மத்.5:7)  என்ற தலைப்பில், வருகிற ஜூலை 25 முதல் 31 வரை, கிராக்கோவ் நகரில் உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்படவுள்ளது. இதில் ஏறத்தாழ ஆயிரம் இந்திய இளையோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக இளையோர் தினம், திருஅவையில் 1985ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.