2016-04-21 16:16:00

ஒரு நாட்டின் சிறுபான்மையினருக்கு கல்வி கற்கும் உரிமை


ஏப்.21,2016. கல்வி, குறிப்பாக, பள்ளிக்கூடத்தில் கற்கப்படும் கல்வி, சமய சகிப்புத்தன்மையையும், பாகுபாடற்ற உணர்வையும் ஊக்குவிப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றது என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒரு நாட்டின் சிறுபான்மையினரின் கல்வி கற்கும் உரிமை குறித்து, ஹாக் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டதன் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹாக் நகரில் நடைபெற்ற, OSCE நிறுவனத்தின் உயர்மட்ட கூட்டத்தில், இப்புதனன்று உரையாற்றிய பேரருள்திரு Janusz Urbanczyk அவர்கள் இவ்வாறு கூறினார்.

பிற மதத்தவர் பற்றிய அறிவு, வன்முறையைத் தூண்டும் புரிந்துகொள்ளாமை மற்றும் மாறாத நிலைப்பாட்டைக் குறைக்கும் என்றும், பல்வேறு இன, கலாச்சார மற்றும் மதங்களை நன்றாகப் புரிந்து மதிப்பதற்கு, கல்வித் திட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார் பேரருள்திரு Urbanczyk.

இந்தக் கல்வித் திட்டங்கள், ஒவ்வொரு மனிதரையும் மதிக்கவும், மக்கள் மத்தியில் ஒருமைப்பாட்டுணர்வை ஏற்படுத்தவும் உதவது உட்பட, முக்கிய விழுமியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய பேரருள்திரு Urbanczyk அவர்கள், மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்வதில், கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் கூறினார்.

பேரருள்திரு Janusz Urbanczyk அவர்கள், OSCE என்ற, ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்திற்குத், திருப்பீடத் தூதராகப் பணியாற்றுகின்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.