2016-04-21 15:20:00

இத்தாலிய காரித்தாஸ் உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து


ஏப்.21,2016. ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஒவ்வொரு மனிதருக்கும் அன்பைத் தெளிவான முறையில் காட்டுவதே, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பினரின் பணியாகும்  என்று இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய மறைமாவட்டங்களின் காரித்தாஸ் அமைப்புகள், உரோம் நகரில் நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய 700 உறுப்பினர்களை, இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தன்னார்வலப் பணியாளர்களைப் பல்வேறு பணிகளுக்கு நியமிக்கும்போது, சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்தல் அவசியம் என்றும் கூறினார்.

இக்காலத்தின் சவால்கள் மற்றும் முரண்பாடுகள் மத்தியில் காரித்தாசின் பணிகள் கடினமானவையாக உள்ளன, ஆயினும், பிறரன்புப் பணியே ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதை கோடிட்டுக் காட்டினார் திருத்தந்தை.

எல்லாக் கிறிஸ்தவ சமூகமும், பிறரன்புப் பணியாற்ற கடமைப்பட்டுள்ளது என்றும், கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளுக்கு இடையே, மதிப்புமிக்க, சகோதரத்துவச் சந்திப்பு இடம்பெற வேண்டுமென்றும், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.