2016-04-21 15:04:00

இது இரக்கத்தின் காலம் : பணிவைக் கற்றுத்தரும் பெரியோர்


அந்த இரயிலில், ஒரு பெரியவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் எதிர் எதிரே அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். இருவருமே முன்பின் அறிமுகமில்லாதவர்கள். ஒரு நகரில் இருவரும் இறங்கினார்கள். பெரிய டிரங்க் பெட்டியுடன் இறங்கினார் பெரியவர். சிறிய பெட்டியுடன் இறங்கிய அதிகாரி, கூலி..கூலி என்று கூப்பிட்டார். அதைப் பார்த்த பெரியவர், ஐயா, இந்தப் பெட்டிதானே, நானே கொண்டு வருகிறேன் என்று, அதைக் கேட்டு வாங்கிக் கொண்டார். ஐயா, சுமை கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற மாதிரி இப்போதைய நாகரீகம் இருக்கிறது என்று பேசிக்கொண்டே, அதிகாரி தங்கும் இடம் வரை சென்றார் பெரியவர். அங்கே போய் பெரியவர் பெட்டியை வைத்ததும், பணம் கொடுப்பதற்கு பர்சை எடுத்தார் அதிகாரி. ஐயா, எனக்குக் கூலி எதுவும் வேண்டாம். உங்களுக்குச் சேவை செய்வது என் கடமை. நான் இதைச் செய்தது அன்புக்காக என்றார் பெரியவர். நன்றியுடன் இருவரும் பிரிந்து சென்றனர். அன்று மாலை அந்த நகரில் ஒரு கூட்டம். அக்கூட்டத்திற்கு அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சென்றிருந்தார். மக்கள் கூட்டம் அலைமோதியது. அன்றைய முக்கிய விருந்தினர் மேடையில் பேசுவதற்காக வந்தார். மேடையில் அமர்ந்திருந்த பெரியவர்கள் எல்லாரும் எழுந்து நின்று, முக்கிய விருந்தினருக்கு மாலை அணிவித்தனர். அதைக் கவனித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அதிர்ச்சி. அவர்தான், அன்று காலையில் அவரது பெட்டியைத் தூக்கி வந்த பெரியவர். அந்தப் பெரியவர்தான் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். பணத்துக்காக அல்ல, அன்புக்காகச் சேவைபுரிவதன் முக்கியத்துவத்தையும், அடக்கத்தையும் கற்றுத் தருகின்றனர் பெரியவர்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.