2016-04-20 15:36:00

மறைக்கல்வி உரை : பாவத்திற்கும் பாவிக்கும் இடையேயான வேறுபாடு


ஏப்.,20,2016. இந்நாட்களில் உரோம் நகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றபோதிலும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி போதனைகளைக் கேட்க வரும் கூட்டத்திற்கு குறைவில்லை. தூய பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற புதன் மறைக்கல்வி உரைக்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் கூடியிருந்த, ஆஸ்திரியாவின் ஏறத்தாழ 100  பனிச்சறுக்கு விளையாட்டு கூட்டமைப்பினரைச் சந்தித்து தன் வாழ்த்துக்களையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாரமும் தூய பேதுரு வளாகம் திருப்பயணிகளாலும் சுற்றுலாப் பயணிகளாலும் நிறைந்திருக்க, புனித லூக்ககா நற்செய்தி 7ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 'பாவியான பெண் நறுமணத் தைலம் பூசுதல்' என்பது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இரக்கம் குறித்த புனித ஆண்டில் இடம்பெறும் இந்த நம் மறைக்கல்வி உரைகளின் தொடர்ச்சியாக இன்று, பரிசேயரான சீமோன் வீட்டிற்கு இயேசு உணவருந்தச் சென்ற நிகழ்வு குறித்து நோக்குவோம். அப்போது அந்நகரின் பாவியான ஒரு பெண் அங்கு வந்து, அவர் காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார் என நற்செய்தியாளர் லுக்கா நமக்கு எடுத்துரைக்கிறார். வெளித்தோற்றத்தைக் கண்டு தீர்ப்பிட்ட அந்தப் பரிசேயரோ, பாவி ஒருவர், தம்மைத் தொட்டது குறித்து அதிர்ச்சியடையாத இயேசுவின் செயல் குறித்து அதிர்ச்சியடைகிறார். இங்கு ஆண்டவரோ, பாவத்திற்கும் பாவிக்கும் இடையேயான வேறுபாட்டைத் தெளிவாகக் காண்கிறார்.  இறை இரக்கத்தின் மீதான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் வெளிப்பாடாக வந்த அப்பெண்ணின் செயல், அவரின் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்றுத் தந்தது என சீமோனுக்கு எடுத்துரைத்துக் கற்பிக்கிறார் இயேசு. பாவியான பெண்ணைக் குறித்த இந்த நிகழ்வு, இறைவனின் இரக்கம் அனைவரையும் சென்றடைகிறது என்பதை நமக்குச் சொல்லித் தருகின்றது. இறைஇரக்கம் முற்சார்பு எண்ணங்களை வெற்றி கொள்வதுடன், அனைத்துத் தடைகளையும் தாண்டிச் செல்கிறது.  கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தின் வழியாக, நாமும் நம் பாவங்களுக்கு மன்னிப்பையும், அருளின் புது வாழ்வையும் பெற்றுள்ளோம். இந்த மீட்பளிக்கும் அன்பின் மறையுண்மையை அனுபவித்துள்ள நாம், இந்த உயரிய உன்னதக் கொடைக்கு நன்றியுள்ளவர்களாக வளர்வோமாக. அதேவேளை, நம் குடும்பங்களிலும், சமூகங்களிலும், இந்த உலகிலும், இந்த அன்பின் சாட்சிகளாகவும்,  அந்த அன்பை எடுத்துச் செல்லும் வழிகளாகவும் மாறுவோமாக.

இவ்வாறு, இறை இரக்கம் குறித்த தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுத மோதல்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் உக்ரைன் மக்களின் மனிதாபிமான உதவிகளுக்காக அழைப்பு விடுத்தார். ஐரோப்பியர்கள் தாராள மனதுடன் உக்ரைன் மக்களுக்காக உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் எல்லாருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.