2016-04-20 15:29:00

போரினால் துன்புறும் உக்ரைன் மக்களுக்காக விண்ணப்பம்


ஏப்.20,2016. ஆயுத மோதல்களால் நீண்ட காலமாகத் துன்புறும் மற்றும் பலரால் மறக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்காக, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்கென, ஏப்ரல் 24, வருகிற ஞாயிறன்று, அனைத்து ஐரோப்பிய கத்தோலிக்க ஆலயங்களிலும் உண்டியல் எடுக்கப்படும் என்று, இம்மாதம் 3ம் தேதி, அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் தான் விடுத்த அழைப்பை, இப்புதனன்று நினைவுபடுத்தி, இந்நோக்கத்திற்காகத் தாராளமாக நிதி வழங்குபவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறன்பின் இந்த அடையாளம், உக்ரைன் மக்களின் பொருளாதாரத் துன்பங்களை அகற்றுவதோடு, அம்மக்களோடு, தானும், உலகளாவியத் திருஅவையும் நெருக்கமாக இருப்பதன் அடையாளமாகவும் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும், செர்னோபில் அணுமின் நிலையத்தில், பேரிடர் இடம்பெற்றதன் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இடம்பெறும் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த உக்ரைன் மற்றும் பெலாருஸ் திருப்பயணிகளை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பேரிடரில் பலியானவர்களுக்காகச் செபிக்கும் அதேவேளை, இப்பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை.

இப்புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் இஸ்பானிய மொழியில் பேசியபோது, கடந்த வார இறுதியில் ஈக்குவதோர் நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதைக் குறிப்பிட்டு, அந்நாட்டு மக்களுடன் தனது தோழமையுணர்வையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.