2016-04-20 16:31:00

இந்தியாவில் 33 கோடிப் பேர் வறட்சியால் பாதிப்பு


ஏப்.20,2016. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 33 கோடி மக்கள், வறட்சியினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாட்டில் வறட்சியினால் 33 கோடி மக்கள் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்றும், வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் பேரிடர் நிதியில் இருந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் ஏற்கனவே 12,230 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மூலம், ஏறக்குறைய 21 இலட்சத்திற்கு மேலான குடும்பத்தினருக்கு 100 நாட்களுக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 254 மாவட்டங்களில் 2 இலட்சத்து 55 ஆயிரம் கிராமங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், பீகார் மற்றும் அரியானா மாநிலங்களில், மழை பற்றாக்குறை இருந்தபோதிலும் வறட்சி நிலையானது அறிவிக்கப்படவில்லை.

மத்திய அரசு அளித்துள்ள தகவலில், வறட்சியினால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், ஜார்கண்ட் மற்றும் கர்நாடகா, முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

மேலும், ஐதராபாத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர், முதல்முறையாக குடிநீர் நெருக்கடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதாரம் : தினத்தந்தி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.