2016-04-20 15:29:00

இது இரக்கத்தின் காலம்... – ஆணவம் என்பது எது?


ஒரு நாட்டின் தலைமை அமைச்சராக, டாங் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் ஆட்சியை நன்முறையில் நடத்துவதில் மிகவும் சிறந்தவர். அவருக்கு புகழ், அதிகாரம் மற்றும் செல்வங்கள் இருப்பினும், புத்த சமயக் கருத்துகள் பற்றி அறிவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். அதற்காக, அந்த ஊரில் இருக்கும் ஒரு ஜென் குருவிடம் அடிக்கடி சென்று கற்றுக் கொண்டார். அவ்வாறு கற்கும் அவர், தான் ஓர் அமைச்சர் என்ற எந்த ஒரு அகங்காரமும் இல்லாமல், ஓர் உண்மையான சீடன் போல நன்கு கற்று வந்தார். ஒரு நாள் அந்த அமைச்சர், ஜென் குருவிடம், "புத்த சமயத்தின்படி, ஆணவம் என்றால் என்ன?" என்று கேட்டார். அதைக் கேட்டதும், குருவின் முகம் சிவந்தது. பின் குரு கோபமாகத் தனது குரலை சற்று உயர்த்தி, "என்ன முட்டாள்தனமான கேள்வி இது?" என்று கேட்டார். இந்த மறுமொழியை எதிர்பாராத அந்த அமைச்சருக்கும் கோபமும், அதிர்ச்சியும் ஏற்பட்டன. பின் குரு சிரித்துக் கொண்டே, "இதுதான் உண்மையான ஆணவம்" என்றார். இதுவரை குருவிடம் கோபம் கொள்ளாத சீடனாக இருந்த அமைச்சருக்கு, குரு கோபப்பட்டு பேசியதைக் கேட்டதும், ‘நான் ஒரு நாட்டின் அமைச்சர், என்னைப் பார்த்து எப்படி கோபத்தோடு பேசலாம்’ என்று எண்ணியபோது, தன்னுள் எழும்பிய கோபமே, உண்மையான ஆணவம் என்பது நன்கு புரிந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.