2016-04-20 15:57:00

ஆயர்கள் மாமன்றத்தின் 14வது ஆணையத்தின் முதல் கூட்டம்


ஏப்.20,2016. “ஒரு குடும்பத்தை அமைப்பது என்பது, கடவுளின் கனவின் ஒரு பகுதியாக இருப்பதாகும், எவரும் தனிமையை உணராத ஓர் உலகைச் சமைப்பதில் கடவுளோடு இணைவதாகும்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிடப்பட்டது. @Pontifex என்ற முகவரியில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் பதிவு செய்யப்படுகின்றன.

மேலும், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலகத்தின் 14வது ஆலோசனை அவையின் முதல் கூட்டம், ஏப்ரல் 18,19 தேதிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இச்செவ்வாயன்று நிறைவடைந்த இக்கூட்டத்தில், முதலில், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்கள், திருத்தந்தையின் Amoris Laetitia அதாவது அன்பின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடலுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு, இம்மடல், திருஅவைகளால், குறிப்பாக, உலகினரால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் கூறினார் கர்தினால் பால்திச்சேரி.

அடுத்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான தலைப்பு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும், திருப்பீடத் தலைமையகம், உலக ஆயர் பேரவைகள், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள், துறவு சபைகள் அதிபர்கள் அமைப்பு போன்று, பல்வேறு இடங்களிலிருந்து பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டு, தலைப்புகள் அடங்கிய ஒரு பட்டியல் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இப்புதனன்று அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் இறுதியில், இந்த ஆலோசனைக் குழுவின் பங்களிப்புக்கும், அவர்கள் மத்தியில் காணப்படும் உடன்பிறப்பு உணர்வுக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.