2016-04-19 16:00:00

புலம்பெயர்ந்தவர்களை ஐரோப்பா தாராளத்துடன் வரவேற்கும்


ஏப்.19,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெஸ்போஸ் தீவுக்குச் சென்று வந்த ஒருசில நாள்களுக்குள்ளேயே, மத்திய தரைக் கடலில் மீண்டும் ஒரு சோக நிகழ்வு நடந்துள்ளது, மனிதாபிமானம் குறித்த கேள்வியை எழுப்புகின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

புலம்பெயர்ந்தவர்களுக்குப் பால்கன் கடல்பகுதி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அம்மக்கள் மத்திய தரைக் கடலில் பயணத்தைத் தொடங்கியுள்ளனர் என்றும், மத்திய தரைக் கடலில், இத்தகைய சோக நிகழ்வுகளுக்கு நாம் உண்மையிலே பழக்கப்பட்டு வருகிறோம் என்றும், பலர் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர், ஆனால் கரை சேருகின்றவர்கள் சிலரே என்றும், திருப்பீட குடியெற்றதாரர் அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò அவர்கள் கூறினார்.

திருத்தந்தையின், லெஸ்போஸ் தீவுத் திருத்தூதுப் பயணம் குறித்து, வத்திக்கான் வானொலிக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டியில் இவ்வாறு கூறிய கர்தினால் Vegliò அவர்கள், ஐரோப்பா மிகுந்த தாராளத்துடன் இம்மக்களை வரவேற்பார்கள் என்று நம்புவோம் கூறினார்.

மத்திய தரைக் கடலில் பலியாகியுள்ள புலம்பெயர்ந்த மக்கள், குற்றக்கும்பல்களால் இந்நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்ற கவலையையும் தெரிவித்தார் கர்தினால் Vegliò

கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவில் குடியேறும் நோக்கத்தில், மத்திய தரைக்கடல் வழியாக, படகுகளில் பயணம் மேற்கொண்ட குடியேற்றதாரர்களில், நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக மீட்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இத்திங்களன்று நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாற்பதுக்கும் அதிகமான கிழக்கு ஆப்ரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது, கிரேக்கத்தின் கலமாட்டா பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள், தாங்கள் லிபியாவிலிருந்து புறப்பட்டதாகவும், நடுக்கடலில் ஆள்கடத்தல்காரர்கள் தங்களை வேறொரு படகுக்கு மாறும்படி கூறினர் எனவும் தெரிவித்தனர். அப்படி மாறச்சொன்னப் படகில், ஏற்கனவே 300 குடியேற்றதாரர்கள் இருந்தனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.