2016-04-19 15:17:00

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, திருஅவைகள் உதவி


ஏப்.19,2016. "ஈக்குவதோர் மற்றும் ஜப்பானில் நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்காகச் செபிப்போம்; இறைவனும், அனைத்துச் சகோதர சகோதரிகளும், அவர்களுக்கு, உதவியும், ஆதரவும் அளிப்பார்களாக" என்பது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இத்திங்க் மாலையில் வெளியிடப்பட்டது.

மேலும், இவ்விரு நாடுகளிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, திருஅவைகளும், காரித்தாஸ் நிறுவனமும் இடர்துடைப்பு உதவிகளை ஆற்றி வருகின்றன.

ஜப்பானின் Kyushu தீவின் Kumamoto நகரில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற இரு நிலநடுக்கங்களில் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதற்கு, முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர் ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள்.

இது குறித்துப் பேசிய, ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் தலைவர் ஆயர் Tarcisio Isao Kikuchi அவர்கள், நிலநடுக்கத்தால் சிறிய ஒரு பகுதிதான் சேதமடைந்திருக்கும் என்று நினைத்தோம். ஆனால், மீண்டும் இடம்பெற்ற நிலநடுக்கம், பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

ஏப்ரல் 14, 16 தேதிகளில் ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் குறைந்தது 41 பேர் இறந்துள்ளனர் மற்றும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

மேலும், தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில் பலியானவர்களின் எண்ணிக்கை 413 ஐத் தாண்டியுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.