2016-04-19 15:00:00

இறைத்தந்தையால் கவரப்படாதவர், உள்ளத்தில் அநாதைகளே


ஏப்.19,2016. இயேசுவின் மீதான இறைத்தந்தையின் அன்பினால் கவரப்படாத கிறிஸ்தவர், ஓர் அனாதை நிலையில் வாழ்வதற்கு ஒப்பாவார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீர்தான் மெசியா என்றால் எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும் என, இயேசுவிடம் யூதர்கள் கேட்ட கேள்விக்கு, இயேசு வழங்கிய பதிலை மையமாக வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

நான் உங்களிடம் சொல்லியும் நீங்கள் நம்பவில்லை, ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேராதவர்கள் என, இயேசு யூதர்களிடம் கூறியபோது, அவர்களின் விசுவாசக் குருட்டுத் தன்மையை குறிப்பிடுகிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் போதனைகளையும் செயல்களையும் கண்டும், தங்கள் இதயத்தைக் கடினமாக வைத்துக்கொண்ட பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், இறைத் தந்தையுடன் தொடர்பற்றவர்களாக, தங்கள் இதயத்தில் அநாதைகளாக இருந்தனர் எனவும் கூறினார் திருத்தந்தை.

தங்களையே மிகப் பெரியவர்களாக நினைத்துக்கொண்டு செயல்பட்ட மறைநூல் அறிஞர்கள், உண்மையில் அநாதைகளாவர், ஏனெனில் அவர்கள் இறைத்தந்தையுடன் எவ்வித நெருங்கிய தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனவும், தன் மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருமெண்ணிக்கையில் புறவினத்தார் கிறிஸ்தவத்தைத் தழுவியது பற்றிய செவ்வாய்க்கிழமையின் முதல் வாசகத்தைக் குறித்தும் எடுத்துரைத்தார்.

இயேசுவை நோக்கி நம்மை அழைத்துச் செல்லுமாறு தந்தையிடம் நாம் வேண்டுவோம், ஏனெனில், தந்தையே தூய ஆவியை அனுப்பி, நம் இதயங்களைத் திறப்பதுடன், கிறிஸ்துவை நோக்கி நம்மை வழி நடத்துவார், என மேலும் எடுத்துரைத்து, தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.