2016-04-19 10:58:00

இது இரக்கத்தின் காலம்: இலட்சம் டாலர் சம்பளத்திற்கும் மேல்...


24 வயது நிரம்பிய இளையவர் இராபர்ட் லீ (Robert Lee) அவர்கள், சிறுவனாய் இருந்தபோது, தன் பள்ளி நண்பர்கள், உணவை வீணாக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இராபர்ட் அவர்களின் பெற்றோர், கொரியாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குக் குடிபெயர்ந்தவர்கள். எனவே, உண்ணும் உணவை வீணாக்குவது தவறு என்பதை, சிறுவயது முதல் இராபர்ட் மனதில் ஆழமாய் பதித்தவர்கள்.

நியூ யார்க் பல்கலைக் கழகத்தில் இராபர்ட் படித்துக்கொண்டிருந்தபோது, 'உணவு சேகரிக்கும் கழகம்' ஒன்றை அவர் உருவாக்கினார். பல்கலைக் கழகத்தின் உணவகம், விடுதிகள் இவற்றில் வீணாகும் உணவை, இக்கழகம் சேகரித்து, அருகிலிருந்த வீடற்றோர் விடுதிக்கு தினமும் வழங்கி வந்தது.

கல்லூரிப் படிப்பை முடித்த இராபர்ட், J.P.Morgan என்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அருகிலிருந்த பெரும் உணவு விடுதிகளில் வீணாகும் உணவை, ஒவ்வொரு நாள் இரவிலும் சேகரிக்கத் துவங்கினார், இராபர்ட். இவரது முயற்சியைப் பாராட்டி, பல உணவகங்கள் உணவளிக்க முன்வந்தன. அந்தந்தப் பகுதியில் சேகரிக்கப்படும் உணவை, அருகிலுள்ள வீடற்றோர் விடுதிகளுக்கு எடுத்துச் செல்ல, தன்னார்வத் தொண்டர்களும் முன்வந்தனர். நியூ யார்க் நகரில் ஆரம்பமான இம்முயற்சி, விரைவில் மற்ற நகர்களிலும் பரவத் துவங்கியது.

தன் ஒய்வு நேரத்தில் இப்பணியைச் செய்துவந்த இராபர்ட், அதை, ஒய்வு நேரப்பணியாக மட்டும் செய்வது போதாது என்பதை உணர்ந்தார். J.P.Morgan நிறுவனத்தில் தன் வேலையை 'இராஜினாமா' செய்துவிட்டு, 'மீதமான உணவைக் காப்பாற்றும் அமைப்பு' - Rescuing Leftover Cuisine (RLC) - என்ற முயற்சியை தன் முழுநேரப் பணியாகச் செய்து வருகிறார் இராபர்ட். "இந்த அமைப்பின் உதவியால், 300 பேர் மூன்று நாட்கள் வயிறார உண்ணமுடிகிறது" என்று, ஒரு வீடற்றவர் விடுதியிலிருந்து வந்த மின்னஞ்சல், தன் வேலையை இராஜினாமா செய்யும் முடிவை எடுக்கத் தூண்டியது என்று இராபர்ட் கூறினார்.

"இலட்சம் டாலர்க்கு மேல் வருமானம் தரும் வேலையை விட்டுவிட்டு, வீடற்றோருக்கு உணவு தரச் செல்வீர்களா? 24 வயது இளையவர் சென்றார்" என்ற தலைப்பில், இராபர்ட் லீ பற்றிய செய்தி, Readers Digest இதழில் வெளியாகியிருந்தது.

இரக்கத்தால் கிடைக்கும் நிறைவை, இலட்சம் டாலர்கள் தர இயலாது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.