2016-04-18 13:54:00

வாரம் ஓர் அலசல் – செவிமடுப்பதில் சிறந்தவர்களாக...


ஏப்.18,2016. பிரேசில் நாட்டில், பெரிய செல்வந்தர் ஒருவர், பத்து இலட்சம் டாலர் மதிப்புள்ள தனது பெண்ட்லே (Bentley) சொகுசு காரை, மண்ணுக்குள் புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார். அந்தக் கார், தனது இறப்புக்குப் பின்னர் யாருக்காவது பயன்படும் என்று, அதற்கு காரணமும் சொல்லியிருந்தார். இதைக் கேட்ட ஊடகங்கள், மனநிலை சரியில்லாதவன், அறிவற்றவன், பத்து இலட்சம் டாலரை வீணடிக்கிறானே என்றெல்லாம் அவரைப் பலவாறு குறை கூறின. பொதுமக்களும், தங்கள் பங்குக்கு அவரைத் திட்டி தீர்த்தார்கள். பெண்ட்லே காரைப் புதைப்பதாக சொன்ன நாளும் வந்தது. அதை வேடிக்கைப் பார்ப்பதற்கு, பலர் ஆவலாகக் கூடினர். காரைப் புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, புத்தம் புதிய அந்தக் காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லாரும் பொறாமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். செல்வந்தர் வந்தார். காரைப் புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கின. விலையுயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே? இது எப்படி உங்கள் மரணத்திற்குப் பிறகு பயன்படும்? அதற்குப் பதிலாக, யாருக்காவது தானமாகக் கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று, சிலர் நேரிலேயே அவரிடம் கோபத்துடன் கேட்டனர். அப்போது அவர் இப்படிச் சொன்னார். நான் காரைப் புதைக்கவில்லை. யாராவது அந்த முட்டாள்தனத்தைச் செய்வார்களா? உங்கள் எல்லாருக்கும் ஓர் உண்மையை உணர்த்தவே இப்படி வித்தியாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார். அங்கு கூடியிருந்த அனைவரும் என்ன உண்மை? என்றனர். இந்தக் கார் பத்து இலட்சம் அமெரிக்க டாலர்தான். இதைப் புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே, நான் உங்களை ஒன்று கேட்கிறேன், மனித உடல் உறுப்புகள் இதைவிட விலை மதிப்பில்லாதவை. இதயம், கண், நுரையீரல், கிட்னி, தோல் என, மனிதகுலத்துக்குப் பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புக்களைப் புதைப்பதால் என்ன இலாபம்,  யாருக்காவது தானமாகத் தரலாமே என்றார் அந்தச் செல்வந்தர்.  இப்படிச் சொல்லி, உடலுறுப்பு தானத்தை நம்பி வாழ்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் பற்றியும், உடல் உறுப்புகள் தானத்தின் அவசியத்தையும் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டார் அவர்.

அன்பு நேயர்களே, பிரேசில் நாட்டுச் செல்வந்தரின் இச்செயலை, நீங்கள் கவனமாகக் கேட்டிருந்தால், அட, என்ன அபாரமான சிந்தனை! என்று அவரைப் பாராட்டியிருப்பீர்கள் அல்லது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்படி ஏதாவது ஒரு செயலை நானும் செய்யலாம் அல்லது, நான் இன்றே எனது உடல் உறுப்புகளைத் தானமாக அளிப்பதற்கு எழுதி வைக்கப் போகிறேன்.. இப்படி பலவாறு சிந்தித்திருப்பீர்கள். அதேநேரம், எந்தச் சிந்தனையும் இல்லாமல், உங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தால், இந்தச் செல்வந்தர் செயலை, கவனமின்றி, ஒரு பொழுதுபோக்காக அல்லது ஆர்வமில்லாமல் நீங்கள் கேட்டீர்கள் என்றுதான் அர்த்தம். ஓர் அறிஞர் சொன்னார்: இந்த உலகம் ஒவ்வொரு நாளும், உனது பிரச்சனைகளுக்குப் பதில்களைத் தந்துகொண்டே இருக்கின்றது. செவிமடுக்கக் கற்றுக்கொள் என்று. அன்பர்களே, நாம் வாழ்வில் முன்னேறவும், நம் குடும்பங்களிலும், சமூகத்திலும் வாழ்வோர், மகிழ்வான, மாண்புடைய வாழ்வு வாழ நாம் உதவுவதற்கும், செவிமடுத்தல், உற்றுக்கேட்டல், உன்னிப்பாகக் கேட்டல் மிகவும் அவசியம். குடும்பத்தில் குழந்தை வளர்ப்பில், பிள்ளைகள் பேசுவதற்குப் பெற்றோர் செவிமடுப்பது, பிள்ளையின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சிக்குப் பெரிது உதவும் என்பது நமக்குத் தெரியாததல்ல.

செவிமடுத்தல் என்பது, ஒருவர் சொல்வதற்குப் பணிந்து நடத்தல் என்பதிலிருந்து மாறுபடுகின்றது. பெற்றோருக்குப் பணிந்து நடக்காத பிள்ளை பற்றிச் சொல்லும் பெற்றோர், எனது பிள்ளை நான் சொன்னபடி கேட்க மாட்டான் என்பார்கள். இருந்தபோதிலும், ஒரு தகவலை அல்லது ஒருவர் பேசுவதைக் கேட்பவரும், அதைப் புரிந்து கொள்பவரும், தான் கேட்டபடி நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். அவர் நடந்துகொள்ளும் தன்மை, அந்தப் பேச்சாளர் விரும்பியதுபோன்று இல்லாமல் இருக்கலாம். கேட்பவர், பேசுபவரின் கருத்தை ஏற்பதைப் பொறுத்தது. Roland Barthes என்பவர் சொன்னார் :“கேட்பது என்பது உடல்சார்ந்த கூறு. செவிமடுத்தல் என்பது உளவியல் சார்ந்த செயல்”என்று. இத்திங்கள் காலையில், இணையதள தினத்தாள் ஒன்றில், தமிழகத்தின் இந்தச் சட்டமன்றத் தேர்தல் பற்றி, ஒரு பத்திரிகையாளர் இப்படி எழுதியுள்ளார்..

தேர்தல், ஆட்சி, அதிகாரம் எல்லாம் ஏழை, எளிய சாமானிய மக்களை வாழ வைக்கத்தான் என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், எப்படியாவது, எம்.எல்.ஏ., சீட் வாங்கிக் கொடுங்கள் என்று, மூன்று கோடி ரூபாய் முதல், பத்துக் கோடி ரூபாய் வரை, முக்கிய பிரமுகர்களிடம் இலஞ்சமாக கொடுத்துள்ளனர் என்ற செய்தியைப் படிக்கும்போது, நிச்சயம், எம்.எல்.ஏ.,வாகி சம்பந்தபட்டவர்கள் மக்களுக்குச் சேவை செய்யப் போவதில்லை. கறுப்பாகவும், வெள்ளையாகவும் செலவழித்த பணத்தை திரும்ப எடுத்து விடுவோம் என்ற அபார நம்பிக்கையைத் தவிர, இவர்களிடம் சின்னதாய்கூட மக்கள் நலனில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. புதிதாக, 1.60 கோடி வாக்காளர்கள், இந்தத் தேர்தலில் ஓட்டு போடப்போகின்றனர். அவர்களது ஓட்டுதான் ஒவ்வொரு தொகுதி வாக்காளரின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது. இந்தப் புதிய வாக்காளர்களின் மனக்கணக்கு வேறுவிதமாக இருக்கிறது என்பதை யாரும் கருத்தில் எடுத்துக் கொண்டது போலவே தெரியவில்லை என்கிறார் பத்திரிகையாளர். புதிய வாக்காளர்கள், தேர்தல் அறிக்கைகளில் நம்பிக்கை வைக்கவில்லை, மேடைப் பேச்சுக்குச் செவிமடுக்கவில்லை என்றே தெரிகிறது.

அன்பர்களே, ‘மூத்தோர் சொல், வார்த்தை அமிர்தம்’என்கின்றது அற நூல். நம்  வீடுகளில் அல்லது சமூகத்திலுள்ள பெரியவர்களின் பேச்சைக் கேட்டு, அதன்படி நடக்க வேண்டும் என்பது நம்மிடையே உள்ள ஒரு பழக்கம். இதையே, “பெரியோர் சொல் தட்டாதே”என முதுமொழி கூறுகிறது. நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட என்று, சிறு வயதிலிருந்தே, தாயின் பாலோடு சேர்த்து நமக்கு ஊட்டப்படுகின்றது. இதுவே நம் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளமும் ஆகும். குறிப்பாக, பிள்ளைகள், இளம் பருவத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். ஆனால், இக்கால இளையோரிடம், அது கிடக்கு பெரிசு, அது சொல்லட்டும், நீ வாடா மச்சி என்பன போன்ற கொச்சைப் பேச்சுகள் மலிந்து விட்டன. நண்பர்களை தேடிக்கொள்ளும் போதும், நெருக்கடிகள் ஏற்படும்போதும் பெரியோர் சொல் மட்டும் அல்ல, பெற்றோர் சொல் கேட்பதும் நன்மை பயக்கும். உள்ளத்தில் தூய்மை அவசியம். உள்ளம் தூய்மை அடைய, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மனம் சொல்லும் போக்கின்படியெல்லாம் நடக்காமல், மனதில் உருவாகும் எண்ணங்களுக்கு  கடிவாளம் போட பழகிக்கொள்ள வேண்டும். இளம் பருவத்தில், மனம் தூய்மை பெற்று விட்டால், எல்லாமே அன்பு மயமாகி விடும். அப்போது, வன்முறைக்கும், தீவிரவாதத்துக்கும் இடம் இல்லை. பொறாமையும், போட்டி மனப்பான்மையும், சொந்த வாழ்வின் முன்னேற்றத்தில் மட்டும் இருந்தால் போதும்.

நல்லவராக வாழ விரும்பும் அன்பு இளையோரே, முதலில் உங்கள் இதயம், நல்ல எண்ணங்களால் நிரம்பியிருக்கட்டும். வல்லவனாக இல்லை என்றாலும், நல்லவனாக வாழ முயற்சி செய்யுங்கள். ஸ்ரீ அரவிந்தர் சொன்னார் - நடந்து முடிந்த ஒன்றைப் பற்றியும், நடக்கப்போவது பற்றியும் எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பது வீண். அது சோர்வையும், தளர்ச்சியையும் தரும் என்று. Stephen Covey என்பவர் சொல்கிறார் – பலர், புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்பதில்லை, மாறாக, பதில் சொல்ல வேண்டுமென்ற சிந்தனையோடே கேட்கின்றனர்" என்று. அன்பர்களே,  நாம் இத்தகையவர்களாய் இருக்க வேண்டாம். எத்தனை பெரியோர் அறிவுரைகளைக் கேட்டாலும், இந்த உலகில் நல்லவனாக வாழ முடியவில்லையே என்று நீங்கள் கலங்கினால், அதற்கு ஒரே பதில் நீங்கள் நம்பியிருக்கும் உங்கள் குலதெய்வத்தில் நம்பிக்கை வைப்பது ஒன்றே. இறைவனை முன்னிறுத்தி முயன்றால், முடியாதது எதுவும் இல்லை என்பதை மனதில் மிக ஆழமாகப் பதிய வையுங்கள்.

அன்புள்ளங்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் வார்த்தைக்குச் செவிமடுப்பதன் முக்கியத்துவம் பற்றியே இஞ்ஞாயிறன்று பேசியுள்ளார். நம் வாழ்வு இறைவனின் கரங்களில் பாதுகாப்பாக உள்ளது. இயேசு நம் ஒவ்வொருவருடனும் நெருங்கிய உறவை உருவாக்க விரும்புகிறார். அவர் நம் வழிகாட்டி, நம் ஆசிரியர், நம் நண்பர், நம் எடுத்துக்காட்டு. என் கரங்களிலிருந்து எவரும் என் மக்களைப் பறித்துக் கொள்ள முடியாது என்கிறார் இயேசு.  அன்பு நேயர்களே, ஒவ்வொரு மதத் தலைவரும், வேத நூல்களும் நமக்கு இப்படிப்பட நல்ல அறிவுரைகளையேச் சொல்கின்றனர். எனவே, முதலில், நம் வேத நூல்களுக்குச் செவிமடுக்கக் கற்றுக்கொள்வோம். உண்மையிலே, மனதார செவிமடுத்து வாழ்ந்தால் அவை நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்காது. வானத்திலிருந்து இறங்கிவரும் மழையும், பனியும் நிலத்தை நனைத்து... விதைப்பவனுக்கு விதையையும், உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல் அங்குத் திரும்பிச் செல்லாதது போன்றே, இறைவனின் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது இறைவனின் விருப்பத்தைச் செயல்படுத்தி வெற்றிகரமாகத் திரும்பும்(எசா.55,10-11). ஆம். இறைவனின் வார்த்தை வல்லமை மிக்கது. அதற்குச் செவிமடுத்து, அதன்படி வாழும்போது நம் வாழ்வும், நம்முடன் வாழ்வோர் வாழ்வும் மகிழ்வாய் அமையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.