2016-04-18 10:46:00

இது இரக்கத்தின் காலம் : மென்மை மனதுடையோர் உண்மையானத் தலைவர்


2013ம் ஆண்டு, மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு திருநாளன்று, திருத்தந்தை, பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றார். அத்திருப்பலியில் அவர் வழங்கிய மறையுரையில், தலைமைப் பணியின் இலக்கணத்தை வரையறுத்தார். தலைவர், இளகிய, மென்மையான மனம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். திருத்தந்தை ஆற்றிய மறையுரையிலிருந்து ஒரு சில பகுதிகள்:

பாதுகாவல் என்ற பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும் கொண்டிருப்பது அவசியம். மென்மையான மனம் கொண்டிருப்பதை வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு, மென்மை உணர்வுகள் கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே, நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.

பணிபுரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, சிலுவையில் இறுதியில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, மனுக்குலத்தில் வறியோர், வலுவிழந்தோர், எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மென்மையான இதயத்துடன், நம்மைச் சுற்றியுள்ள உலகை மென்மையாக்கும் வலிமையைப் பெறுவோமாக! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.