2016-04-16 16:20:00

மத்திய தரைக் கடல், கல்லறையாக மாறக் கூடாது


ஏப்.16,2016. புலம்பெயரும் மக்களை வரவேற்று கவனித்துவரும் கிரேக்க மக்களுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்து, அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக, நானும், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பேராயர் 2ம் எரோனிமுஸ் அவர்களும் இன்று இங்கு இருக்கின்றோம். “கடவுளே நம் புகலிடம் மற்றும் வலிமை. நம் துன்ப நேரங்களில் உதவுபவர் அவரே. எனவே நாம் பயப்படத் தேவையில்லை”(தி.பா.45,2-3). போர், பசி மற்றும் துன்பங்கள் நிறைந்த இடங்களிலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதும், உங்களின் ஏக்கங்களையும், பாதுகாப்பான, ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். மத்திய தரைக் கடல், உங்கள் அன்புள்ளங்களின் புதைகுழிகளாக மாறியிருப்பதையும், உங்களுக்கு எல்லைகள் மூடப்படுவதையும் பார்த்து கண்ணீர் சிந்தினோம். உங்களைப் பார்த்துப் பயப்படுகிறவர்கள், உங்கள் கண்களையும், உங்கள் முகங்களையும், உங்கள் குழந்தைகளையும் உற்றுநோக்கவில்லை. மாண்பும், சுதந்திரமும், அச்சத்தையும், பிரிவினையையும் அகற்றும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்கா, ஐரோப்பா, கிரேக்கம் ஆகியவற்றுக்கும் மட்டும் உரிய விவகாரம் அல்ல குடிபெயர்வு, மாறாக, இது உலகுக்கான விவகாரம் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். உங்களை உலகம் நடத்தும் முறையைப் பொருத்தே அது தீர்ப்பிடப்படும். நீங்கள் வருகின்ற பகுதிகளின் சண்டைகளுக்கும், கலவரங்களுக்கும் பதில்சொல்லும் முறைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மத்திய தரைக் கடல், கல்லறையாக மாறக் கூடாது. அது, வாழ்வின், கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகள் சந்திக்கும், பரிமாற்றம் மற்றும் உரையாடலின் இடமாகும். நாம் கூடியுள்ள நோஸ்த்ரும் கடல், குறிப்பாக ஏஜியன் கடல், அமைதியின் கடலாக மாற வேண்டும். குடிபெயர்வின் ஆணிவேராக அமைந்துள்ள மத்திய கிழக்குப் பகுதியின் சண்டை முடிந்து, அமைதி காக்கப்பட வேண்டும். அப்பகுதியிலுள்ள மக்கள் எல்லாருக்காவும் செபிக்கின்றோம். மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் கடும் நெருக்கடியான நிலையையும், அப்பகுதியின் பிற சிறுபான்மையின மற்றும் மதத்தினரையும் குறிப்பிட விரும்புகிறோம். அவர்கள் அழிவுறாமல் இருப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம். நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டோம் என, வாக்குறுதி அளிக்கிறோம். உங்களுக்காகப் பேசுவதை நாங்கள் நிறுத்தவே மாட்டோம். உலகின் கண்களும், இதயங்களும் திறப்பதற்கு எங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவோம். அமைதி, வரலாற்றின் முடிவு அல்ல. இது எதிர்காலத்தோடு தொடர்புடைய வரலாற்றின் தொடக்கமாகும். இதனை, மற்ற கண்டங்களைவிட, ஐரோப்பா நன்றாக அறிந்திருக்க வேண்டும். உங்களைக் கடவுள் ஆசிர்வதித்து உறுதிப்படுத்துவாராக என்று, உரையை நிறைவு செய்தார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.