2016-04-16 16:07:00

திருத்தந்தை பிரான்சிஸ் : நம்பிக்கையை இழக்காதீர்கள்


ஏப்.16,2016. நான் உங்களோடு இன்று இருப்பதற்கு விரும்பினேன். நீங்கள் தனியாக இல்லை என்பதை இன்று சொல்ல விரும்புகிறேன். நல்லதொரு வாழ்வைத் தேடுவதில், வாரங்கள் மற்றும் மாதங்களாக, நீங்கள் பல துன்பங்களை எதிர்கொண்டுள்ளீர்கள். உங்கள் கதைகளைக் கேட்பதற்காக, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு, பேராயர் எரோனிமுஸ் ஆகிய எனது சகோதரர்களுடன் இங்கு வந்துள்ளேன். இந்தக்  கடும் மனிதாபிமான நெருக்கடி குறித்து உலகின் கவனத்தைத் திருப்பி, இதற்கு ஒரு தீர்வு காண்பதற்கு, கெஞ்சுவதற்காக வந்துள்ளோம். கடவுள், மனித குலத்தை ஒரே குடும்பமாகப் படைத்தார். நம் சகோதர, சகோதரிகள் துன்புறும்போது, நாம் எல்லாருமே பாதிக்கப்படுகிறோம். துன்புறும் மக்களைப் புறக்கணித்து, அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்துவது, சிலருக்கு எளிதாக இருப்பதை அனுபவத்தால் பார்க்கிறோம். ஆயினும், இந்த நெருக்கடி, நம்மில் சிறந்ததைக் கொண்டுவரும் என்பதையும் அறிந்துள்ளோம். அதற்கு கிரேக்க மக்களே சான்று. ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமிருந்து உங்களுக்கு உதவ வரும் பல மக்களில், குறிப்பாக இளையோரில் இதைப் பார்க்கின்றீர்கள். ஆயினும், மேலும் அதிகம் செய்யப்பட வேண்டியுள்ளது. நம் துன்பங்களில் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். அவர் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை. யாராவது ஒருவர் நமக்கு உதவ எப்போதும் வருகிறார்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள் என்ற செய்தியை இன்று விட்டுச் செல்ல விரும்புகிறேன். நாம் அடுத்தவருக்குக் கொடுக்கும் மிகப்பெரும் கொடை அன்பு, இரக்கமுள்ள பார்வை, செவிமடுத்துப் புரிந்துகொள்ளத் தயாராய் இருத்தல், ஊக்கமூட்டும் வார்த்தை மற்றும் செபம். இந்தக் கொடையை ஒருவர் ஒருவருடன் பகிர்ந்துகொள்வீர்களாக. கிறிஸ்தவர்களாகிய நாங்கள், நல்ல சமாரியர் கதையைச் சொல்வதற்கு விரும்புகிறோம். இது, கடவுளின் இரக்கம் பற்றிச் சொல்லும் கதையாகும். அன்பு நண்பர்களே, உங்கள் எல்லாரையும், குறிப்பாக, சிறார், வயதானவர்கள் மற்றும் உடலிலும், உள்ளத்திலும் துன்புறும் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக. உங்களை அன்போடு தழுவிக்கொள்கிறேன் என்று, மொரியா முகாமில் தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.